புதியமாதவி கவிதைகள்

அர்த்தமுள்ள சிலுவை

கேளுங்கள் தரப்படும்
தட்டுங்கள் திறக்கப்படும் - என்றாயே
நாங்கள்
தட்டியதால்
எங்கள்
கரங்கள் வெட்டப்பட்டன.

கேட்டதால்
எங்கள்
குரல்கள்
சிறைப்பட்டன..

வானமும் பூமியும்
மறைந்து போனாலும்
என் வார்த்தைகள்
மறையாது - என்றவனே!
உன்
வார்த்தைகள் அழியவில்லை
ஆனால்
அதன் அர்த்தங்கள்தான்
சிலுவையில்.

பால் வேற்றுமை

பசுவுக்குப் பூஜை
பெண்சிசுவுக்கு
கள்ளிப்பால்
தொல்காப்பியன் அறியாத
பால் வேற்றுமை