சொல்லாத சொல்லொன்றைச் சொல்
கவிஞர் இனியன், கரூர்
வரம்செய்து
வந்துதித்த வண்டமிழ்ச் செல்வ
அரசாள வந்தவனே ஆரிரரோ கண்ணுறங்கு
செல்லப் பசுங்கிளியே! செந்தமிழ் வள்ளுவர்
சொல்லாத சொல்லொன்றைச் சொல்.
செல்வத்துள் செல்வமாய்ச் சேர்ந்தநல் பொன்மகளே
கல்விதான் யாருக்கும் கைவிளக்கு நீயுறங்கு
வெல்லச் சுவையேநீ வெற்றிபெற யாருமே
சொல்லாத சொல்லொன்றைச் சொல்.
பெண்கள் பருவத்தை ஏழெனப் போற்றியே
கண்க ளெனச்சொல்லும் கண்வளராய்; எம்மொழிக்கும்
இல்லாச் சிறப்பை இனிதாய் விளக்கிட
சொல்லாத சொல்லொன்றைச் சொல்.
மாமன் அடிச்சானோ மல்லிகைப்பூ செண்டாலே
அத்தை அடிச்சாளோ அல்லிப்பூ செண்டாலே
வல்லோய் அவர்நாணும் வண்ணமாய்ச் சிந்தித்துச்
சொல்லாத சொல்லொன்றைச் சொல்.
தாயிற் சிறந்ததோர் தெய்வமும் உண்டோடி
வாயிற் கதவருகே வந்தநல் தெய்வத்தின்
பல்லாற்றல் எல்லாம் புலப்பட யாருமே
சொல்லாத சொல்லொன்றைச் சொல்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்