சொல்லாத சொல்லொன்றைச் சொல்

தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்

ல்லாடும் போதாகி வைதாரின் வாய்நின்று
சொல்லாடல் முற்றிச் சினங்காட்டும்-நில்லாது
வில்லாடும் போதை விடிவாய் உருவாகச்
சொல்லாத சொல்லொன்றைச் சொல்!

நோக்கம் பெயக்கண்டும் நூதர் தடுமாற்றம்
தாக்கும் வயக்காணும் சர்ப்பமாம்-போக்காகும்
கல்லாத மனிதருக்கும் காட்டும் பொருளாகச்
சொல்லாத சொல்லொன்றைச் சொல்!

நேரிற் பழுத்து நெருப்பிற் புடமாகிப்
பாரிற் சிறக்கும் பசுந்தங்கம்-மூரியாய்ச்
சொல்லாக்கி வாட்டும் சிறியோர் மனத்தூறச்
சொல்லாத சொல்லொன்றைச் சொல்!

கற்றா ரிலையாயும் காதற் கவிராயர்
நற்பா வுரைக்குங்கால் நன்றென்பார்-முற்காணும்
சொல்வேந்தர் தன்னைச் செருக்காடும் வஞ்சர்க்குச்
சொல்லாத சொல்லொன்றைச் சொல்!

கன்னற் தமிழும் கவிதையுங் கூடிவரும்
இன்பப் புதுவார்ப்பில் இசையார்க்கும்-மன்பதையின்
பொல்லாத மற்போர் புயல்வாழ்வு போகவெனச்
சொல்லாத சொல்லொன்றைச் சொல்!

கெட்டார் வயல்வெளிப் பொட்டல் மனப்பாங்கு
தொட்டிற் பழக்கம் சுடுகாடாய்ப்-பட்டுவிழ
மல்லாடுஞ் சாயல் மனிதர் திருந்திவரச்
சொல்லாத சொல்லொன்றைச் சொல்!

காலப் பரியந்தம் காவிரி மேலாண்மைச்
சாலத் துருத்தியிடுஞ் சாக்கோடும்-கோலமெனச்
சொல்போலும் தீய குதர்க்கம் புரியாமல்
சொல்லாத சொல்லொன்றைச் சொல்!

தூத்துக் குடிமண்ணில் துத்தம் ஆடுபுரி
யாத்த கொலையின் யமக்காளம்-பார்த்தந்த
கல்போலும் வன்மைக் கனவாய் மடிந்தவர்க்குச்
சொல்லாத சொல்லொன்றைச் சொல்!

ஆட்சியொடும் மாட்சியொடும் அத்தனைக்கும் சொல்லாடல்
சூழ்ச்சியொடும் நெட்டுரைத்தாற் கேடாகும்-மீட்சிதரும்
பொல்லாத பாங்குப் புதிராய் உளம்காயச்
சொல்லாத சொல்லொன்றைச் சொல்!

வாய்மைக் குறிபோகும் வார்த்தை சவக்காடாம்
தூய்மை இலையென்றாற் தேசமில்லை-ஆய்கடவைக்
கெல்லாமும் நீதி கிடைக்காமற் போகுமெனில்
சொல்லாத சொல்லொன்றைச் சொல்!





 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்