சொல்லாத சொல்லொன்றைச் சொல்

கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்

தாய்மொழியில் சிந்திப்போர் தானாய்ச் சிறப்பான
ஆய்வினை உள்ளத்தில் ஆர்வமாய் - பாய்ச்சியே
நல்ல கருத்துக்கள் நாவினால் செப்பிடின்
சொல்லாத சொல்லொன்றைச் சொல்

சான்றோர்கள் கூடும் சபையிலே பேசுகையில்
மாற்றார்கள் சொல்லாத மாண்பினை - ஆற்றலுடன்
எல்லோரும் எங்குமே ஏற்கும் விதத்திலே
சொல்லாத சொல்லொன்றைச் சொல்

அஞ்சியஞ்சி வாழ்வதிலும் அஞ்சாமல் காதலிக்கு
வஞ்சனை யின்றியே வாக்கினை - நெஞ்சினால்
இல்லையே என்னாத எல்லோரும் நினைக்காத
சொல்லாத சொல்லொன்றைச் சொல்

விரும்பியே இல்லற வாழ்வில் புகுந்தோர்
அருமையாய்ப் பூசலும் ஆனால் - இருவரும்
இல்லறத்தில் இன்பமுற ஈடில்லா நல்மொழியில்
சொல்லாத சொல்லொன்றைச் சொல்.






 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்