முள்ளிவாய்க்கால் மண்மேடே!
சட்டத்தரணி இரா.சடகோபன்
என்னருமைத்
தாய்நாடே! இலங்கை மண்ணே
உன்னருமைப் பிள்ளைகளை உருக்குலைத்த மாயமென்ன?
மன்னர்களும் வீற்றிருந்த மருக்கொழுந்து பூமியிலே
மண்மூடிப்போனதென்ன மழலைகளும் அன்னையரும்
கண்மூடித்தனமாக கட்டவிழ்ந்த வன்முறையால்
காணாமல் போய்விட்ட கண்மணிகாள்! கண்மணிகாள்!
கண்கலங்கித் தவிக்கின்றேன் கதிகலங்கித் துடிக்கின்றேன்
என்மனதைத் தேற்றுவதற்கு என்ன தவம் நானிருப்பேன்
தென்கோடிச் சீமையிலே பலகோடி உறவிருந்தும்
சென்னை நகர்ப்பட்டினத்தில் செந்தமிழர் கொலுவிருந்தும்
உன்னுயிரை காப்பாற்ற உற்றார் தான் வந்தனரோ
கண்மணியின் துயர்துடைக்க கயவர் அவர் வரவில்லை
கண்துடைப்பு வித்தைகளை கட்டவிழ்த்து விட்டதுடன்
காதுகளில் பூச்சுற்றி நீலிக்கண்ணீர் தான் வடித்தார்
கதிரைகளில் அமர்ந்து கொள்ள குளறினார்
கொக்கரித்தார், குற்றினார், குதர்க்கம் செய்தார்
என்னாட்டில் எனக்கில்லை சம உரிமை
தன்நாட்டில் தமக்கில்லை மொழியுரிமை
இந்நாட்டில் எதற்காக நீ பிறந்தாய் ?
பன்னாட்டில் பலவாறு தொழில் புரிந்தாய்
பொன்னாடும் பிறநாடும் பொற்குளங்கள்
கொண்டுவந்து இந்நாட்டை அணிசெய்தாய்
கண்ணாக காத்திருந்த என் நாட்டை
மண்மேடாய் மண்மேடாய் ஆக்கிவிட்டார்
என் மண்ணே எனக்களித்த புதைகுழிகள்
கண்மணிகாள் படுத்துறங்கும் தலையணைகள்
விண்மீன்கள் இரவில்தான் கதை சொல்லும்
உன்கண்ணீரே வரலாற்றில் கதை எழுதும்
மண்ணாகப் போய்விட்டாய் வருந்தாதே என்னுயிரே
உன் உயிர்தான் என் உயிரும் என்னுயிர்தான் உன்னுயிரும்
கண்ணயர நேரமில்லை காத தூரம் வந்து விட்டோம்
காத்திருப்போம் காலங்கள் ஒருநாள் பதில்சொல்லும்
விளைந்த பயிர் அறுக்க இன்னும் விடியவில்லை
களைந்த கேசம் அள்ளி முடிக்க நேரமில்லை
மலையென குவிந்து வரும் யுத்த எந்திரங்கள்
பொலிந்தன ஆயிரம் நச்சுக்குண்டுகளை
இலையென உதிர்ந்தன எம்முடல்கள்
சிதைந்தன, நைந்தன, கருகின் எம் சுற்றங்கள்
வினைவந்துற்றதுசூவா யானறியேன்
கொடுங்கூற்றென வந்தவன் யாரென செப்புவது
ஓலங்கள் ஓலங்கள் ஒலித்தனவெங்கும்
சிதறிய உடல்கள் சிந்திய ரத்தம் உறைந்தென பூமியெங்கும்
கதறிய கூக்குரலில்லை காதுகளில்
இடறிவிழுந்த இடங்களில் எல்லாம் பிணங்கள் பிணங்கள்
பதறிய நெஞ்சம் திகைத்தது, திண்டாடியது, திடுக்குற்றது
எத்தனை இரவுகள், எவ்வளவு துயரங்கள்
அத்தனை நடந்தும் ஆண்டகை வருவான் ஆண்டகை வருவான்
அனத்தல்கள் கேட்டன, ஆண்டகை வரவில்லை
போர் ரொன்றை போரிட்டு
போரில் வென்றோர் யாருளர்
தீராத போர் வேட்கை நீண்ட காலம்
நம்மண்ணை தீண்டியதால் நாமும் கெட்டோம்
தாராதார். நம்முரிமை தருவாரென்று
நீடித்தால் போராடி சிவந்த மண்ணை
வேரறுக்கும் நோக்கில் எம்மை சாகடித்தார்
வெந்த புண்ணில் வேல்பாய்ச்சி நோகடித்தார்
நீண்ட போரில் எத்தனை பேர்
சுடு ரத்தம் சிந்தப் போய் மண்ணைத் தின்றார்
கொண்டதொரு கொள்கை ஒன்றை
தோளிற் சுமந்து மண்ணுக்கு வித்தானார்
கண்டதிங்கு கத்தரிக்காய் ஒன்றுமில்லை
நில்லுங்கள் ஒருநிமிடம் கேள்மின் சொல்வேன்
தண்டலுக்கு நிற்பதென்றால் தாற்பரியம் புரிந்து கொள்ளும்
தகைமை வேண்டும்
எதற்காக தம்மினத்தை அடகு வைத்தார்
எதை நம்பி முன்னெடுத்தார் உரிமைப்போரை
கதை சொன்னார் உலகெங்கும் கனன்று வந்து
கை கொடுக்கும், கால்கொடுத்தும் உதவுமென்று
விதை செய்தார் தம்மக்காள், பிறமக்காள்
நாட்டுமக்காள் நனி செய்த அனைவரையும்
பதை பதைத்தோம் இறுதியிலே பற்றறுத்தோம்
விதை நெல்லாய் விதைக்கப்பட்டோம் விழித்தெழுவோம்
வரலாறு தோற்றபெரு வஞ்சனைகள் பொதிந்த பல
இருளான சரித்திரங்கள் நிறையவே பாரிலுண்டு
மணலாறு முதலாக மாவிலாறு எனத் தொடர்ந்து
புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன், முள்ளி வாய்க்காலென
திரளான மக்கள் தனை பலிகொண்ட கதை கூறும்
சிந்துவெளி நாகரிகம் மொஹஞ்சதாரோ ஹரப்பா கூட
வரலாற்றில் எப்போதோ மண்ணாகி மடிந்து போன
மண்மேட்டின் கதைகள் தானே.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்