எழுச்சி சொல்லும் முடிவுரை!

கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா

றந்துபோமோ ஈழமண்ணின் மக்கள்கண்ட வேதனை
      மறுபதிப்புப் போலதூத்துக் குடியில்வந்த சோதனை!
பிறந்தமண்ணை அழிவினெல்லை போய்விடாது காக்கவே
      பிரிவுமின்றிப் பேதமின்றிப் பிறந்ததுபோ ராட்டமே!
திறந்தகை ளோடுமக்கள் தீர்வுகேட்டு நின்றனர்
      தெருவிலிட்டே யவரைநாய்போற் சுட்டுவீழ்த்திக் கொன்றனர்!
இறந்துபட்ட மக்களென்ன ஈனமான ஈக்களா?
      இன்றளித்த சலுகையென்ன உடலைமூடும் பூக்களா?

காக்கவந்த காவற்கூட்டம் கண்மறைத்துக் கொண்டது
       கட்டுப்பாடு என்றுசொல்லிக் கலவரத்தைத் தந்தது!
மாக்களாக எண்ணியங்கு மானிடத்தைக் கொன்றது
       மன்னுயிர்கள் மாய்ந்துபோக மனமகிழ்ச்சி கண்டது!
வாக்களித்து அரசிலேற்றி வைத்தமக்கள் வாயிலே
       வாரியள்ளி மண்ணிறைத்து வதைத்ததுவோ நீதியே?
தீக்குளித்த பின்னர்வந்து நீர்தெளித்தல் வேடமே!
       தேர்தல்வந்து சேரும்போது தெரியவைப்பார் பாடமே!

படிப்படியாய் உரிமையெல்லாம் பறிகொடுத்து வீழ்வதோ
       பண்டையநம் பெருமையெல்லாம் பகற்கனவாய்ப் போவதோ?
விடிவுகால மொன்றுகாண விளைவதுபோ ராட்டமே
       விசமிகளின் வேலையென்று விலக்குதல்ஏ மாற்றமே!
அடிப்படைக்குத் தீர்வுகாணா அரசுகாலம் சொற்பமே
       ஆற்றொணாது அழுதகண்ணீர் அடித்துவீழ்த்தும் கொற்றமே!
நெடியவாசல் மங்கலம்பின் நேற்றுதூத்துக் குடிவரை
        நீளுகின்ற எழுச்சிசொல்லும் நிச்சயமாய் முடிவுரை!



 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்