இசுடெர்லைட்
சாம்பலாகும்
பாவலர் கருமலைத்தமிழாழன்
கயிறென்றே
எண்ணியது தூக்காய் மாறிக்
கழுத்துதனை நெரிப்பதினை எடுத்துச் சொல்லி
வயிறதனின் பசிபோக்கும் என்றே எண்ண
வாய்க்கரிசி போட்டதினை எடுத்துச் சொல்லி
பயிராக வளம்கொடுக்கும் என்றே எண்ணப்
பசுங்குருதி உறிஞ்சியதை எடுத்துச் சொல்லி
உயிரெடுக்கும் தொழிற்சாலை மூடச் சொல்லி
உயிர்த்தெழுந்த மக்கள்தம் உயிரெ டுத்தார் !
பன்னாளாய் அமைதிவழி எதிர்பைக் காட்டிப்
பன்னூறு விண்ணப்பம் கொடுத்த வர்மேல்
தன்னாட்டு மக்களினைக் கொன்ற ழித்த
தணல்வெறியன் இராசபக்சே போல யிங்கே
தன்குஞ்சை மிதிக்கும்தாய் கொடுமை யாகத்
தன்னாட்சிக் கீழிருக்கும் மக்கள் தம்மை
வன்முறையால் காவலரை வைத்த டக்க
வழிசெய்தார் ஆட்சியர்தாம் வேட்டெஃ கத்தால் !
ஊரார்கள் ஊர்தன்னைக் காக்கு மாறும்
உயிர்தன்னைக் காக்குமாறும் கேட்ப தாலே
போராட்டம் வெடிக்குமென்று அறிந்த பின்பும்
போயழைத்துப் பேசுதற்கே முயன்றி டாமல்
தேராட்ட ஆட்சியாளர் அமைதி யாகத்
தெளிவின்றிச் செயலின்றி இருந்த தாலே
வேரான மக்களினைக் காவ லர்கள்
வேண்டாதார் எனச்சுட்டுத் தள்ளி னார்கள் !
விலங்குகளைக் காப்பதற்கும் சட்டத் தாலே
விதிவகுத்துத் தந்துள்ளார் ! பறவை கூட
நலமுடனே வாழவழி வகுத்துள் ளார்கள்
நம்முயிரைக் காக்கத்தான் சட்ட மில்லை !
நிலம்மீதில் உடல்வீழத் தூத்துக் குடியில்
நியாயத்தை நீதியினைத் தூக்கெ றிந்தார்
களம்வென்ற தமிழரினம் தோற்றி டாது
கனல்முன்னே இசுடெர்லைட் சாம்ப லாகும் !
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்