துயரத்தில் ஆழும் தூத்துக்குடி

புலவர் முருகேசு மயில்வாகனன்

செல்வச் செழிப்பான தூத்துக் குடியோ
       துயரத்தில் ஆழ்கின்ற துன்பச் செய்தி
அல்ல லைத் தந்த ஆட்கொலி நச்சாலை
      ஆற்றொணாத் துன்பத்தின் அதிக ரிப்பு
அல்ல லுற்ற மக்களங்கே அணிதி ரண்டே
      அரசுக்கு எதிரான ஆர்ப்பாட் டங்கள்
எல்லை மீறியே எதிர்கொள் காவலர்
      எடுத்த நடவடிக்கை ஏற்பட் டழிவே.

சாத்வீகப் போராட்டச் சாதனை யாளரைச்
       சாக்கடை யாளராய்க் காணும் அரசே
சூத்திர ர் என்றெண்ணிச் சுட்டுத் தள்ளிச்
      சுகங்காண எத்தனித்தால் சூழும் துன்பம்
கோத்திரம் பார்க்கும் கோணல் அரசின்
      கோட்பாட்டுக் கிணங்கவே கோலோச்ச நினைத்தால்
தூத்துகுடி வந்துன்னைத் தூக்கி எறியும்
       சத்திய சோதனை சான்றா மிதுவே!

மக்கள் வாக்கை மனதிற் கொண்டே
       மனிதம் என்னும் மருந்தை உண்டே
தக்க பணியைத் தவறின்றிச் செய்தே
       சாதனை யாளரெனும் சான்றைப் பெற்றால்
மக்கள் உன்னை மனதிற் கொண்டே
       மாற்றார்க் கெதிராய் வாக்கைத் தந்தே
சிக்க லறுத்துச் சிறப்பினைச் செய்யத்
       தக்கதோர் நல்லாட்சி தானா யமைப்பரே.



 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்