எரியுண்ட நூலகம்

புலவர் முருகேசு மயில்வாகனன்

ற்றவர்கள் மற்றவர்கள் கலந்து பேசி
       கவினொளிர் கட்டிடத்தைக் கட்டி முடித்தே
நற்றமிழர் நூல்களை மட்டு மல்ல
       நனிசிறந்த பிறமொழி நூல்க ளுடனே
கற்றதோர் நூலகரைக் காப்பா ளராக்க
       களிப்புடனே தேர்ந்தெடுத்தே கடமை செய்ய
உற்றுணர்ந்த செயற்குழு உறுதி பூண
       ஊனமின்றி நூல்நிலையம் உயர்ந்த தன்றே.

தென்கிழக்கு ஆசியாவின் சிறந்த நூலகம்
      தேர்ந்தெடுத்த ஏடுகளில் தெய்வீக நூல்கள்
தொன்மைசேர் ஆன்மீகம் தொடர்விஞ் ஞானம்
      செம்மொழியில் வல்லோரின் சேமிப்பு எத்தனை
அன்னைத் தமிழின் ஆலய மன்று
      அகோரத் தீயினால் அழித்த அரசே
இன்னல்கள் தந்தாய் எங்கட்கு ஏற்றோம்
      எழுவோம் மீண்டும் ஏற்றம் பெறுவோம்.

வானரத்தின் வழிவந்த வன்முறை யாளர்
       வளந்தரு நூலகத்தைக் தீமூட்டி எரித்தார்
மானத்தைக் காத் தந்த மாதா கோவில்
       மக்களின் மனங்களில் மறையா திருக்க
ஊனமுற்ற கட்டிடத்தை மீண்டுங் கட்டி
       உறுதியுடன் நன்னூல்கள் ஊரில் சேர்த்தே
ஈனர்கள் மனங்கொதிக்க எழுச்சி கொண்ட
       எம்மவர்கள் திறமைதனை ஏற்றி மகிழ்வோம்.

செம்மொழியாம் எம்மொழியைச் சீர ழிக்க
       சிங்களத்தார் திட்டமிட்டே செய லிறங்கித்
தம்படையை அரசினரே தலைமை ஏற்றுத்
       தப்பான வழிகளிலே தீர்வு காண
விம்மல்கள் ஏதுமற்ற முற்ற வெளியில்
       வெள்ளம்போல் மக்களின் கூட்ட மொன்றில்
தும்பிபோல் வந்தங்கே சுட்ட சூட்டில்
       சூழ்ந்திருந்த மக்களின் துயர மன்றே.


(1981 ஜூன் 1 – யாழ் நூலகம் எரியூட்டப்பட்ட நாள்.)


 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்