யாழ் நூலகம்
கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா
பேரறிவுப்
பெட்டகமாய்ப் பெருமைகொண்ட நூலகத்தை
பேரினத்திற் பிறப்பெடுத்த பேய்க்கணங்கள் தீய்த்தனவே!
ஆறறிவு அற்றவராய் அனலிலிட்டார் அத்தனையும்
நீறாகிப் போனபின்தான் நெருப்பும் அடங்கியது!
மன்னுயிரைக் கொன்றவர்கள் மனநிறைவு காணாராய்
நுண்ணறிவின் ஊற்றான நூலகத்தைத் தீயிலிட்டார்!
அரியபல நூல்களெல்லாம் ஆயிரமாய் ஆயிரமாய்
எரியவைத்துப் பார்த்து எக்காளக் கூச்சலிட்டார்!
காட்டு மிரண்டிக் கயவர்கள் அன்றறியார்
மூட்டிய தீயினுள்ளும் முளைத்துவரும் தமிழென்று!
அனல்பட்டும் அடிபட்டும் ஆழிப்பே ரலைபட்டும்
புனல்பட்டும் பொலிவோடு பொங்கிவந்த தழிழென்று!
எரிசாம்பல் உள்ளிருந்து எழும்பீனிக்ஸ் சிறகடித்து
விரிவானில் பறக்கின்ற விந்தைகற்ற மொழியென்று!
முன்னை மொழிகள்பல மூச்சடங்கிச் சாய்ந்துவிடத்
தன்னே ரிலாது தழைத்தமொழி தமிழென்று!
படைநடத்தி வந்தாலும் பாழ்நெருப்பை யிட்டாலும்
தடையுடைக்கும் வலுவோடு தரணியிலே தமிழ்வாழும்!
செம்மொழியாய் என்றென்றும் சிம்மா சனத்தினிலே
எம்மினிய அன்னை இருந்தரசு செய்திடுவாள்!
(1981 ஜூன் 1 – யாழ் நூலகம் எரியூட்டப்பட்ட நாள்.)
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்