கைகோர்ப்போம்!

அருள்மணி சபா.அருள்சுப்பிரமணியம்

றிவுதனை வளர்ப்பதற்கு
         ஆதார மாயிருந்த – அந்த
         அருமந்த நூலகத்தை
பொறிமூட்டி எரித்தார்கள்
         பொல்லாத கயவர்கள்!- எங்கள்
         புத்தமதக் கனவான்கள்!!

அறிவளிக்கும் நூலகத்தை
         அழித்துவிட்டால் தமிழருக்கு – பெரும்
         அழிவுவரும் எனநினைத்து
நெறியற்ற விதிசெய்து
         நெருப்பிட்டார் நூலகத்தில் – அந்த
         நீதியற்ற ஆட்சியினர்!

சீப்பொளித்து வைப்பதனால்
        திருமணங்கள் நிற்பதில்லை – ஆனால்
        சிறுதடங்கல் வருமுண்மை!
ஏப்பமிட்டுத் தமிழினத்தின்
        இருப்பதனைச் சிதைப்பதற்கு - இன்றும்
        எத்தனையோ சதிகளப்பா!!

சீப்பொளித்து நேருகின்ற
        சிறுதடங்கல் ஒன்றைத்தான் - அவர்கள்
        செய்துமனம் களித்தார்கள்!
தீப்பொறியும் எம்முணர்வைத்
        தீய்க்கவழி தெரியாது - இன்றும்
        திகைப்போடு பார்க்கிறது!

கல்வியொரு நாட்டினது
        கண்ணாகும் என்றன்றோ – உலகம்
        கருதியதை வளர்க்கிறது
கல்வியெனும் கண்பிடுங்கி
        கபோதிகளாய் ஆக்குதற்கோ – அன்று
        கனல்மூட்டி மகிழ்ந்தார்கள்!

அறிஞர்க்குத் தீனிதந்த
        அற்புதநல் நூலகத்தை – கொடியோர்
        அறிவின்றி எரித்தார்கள்!
பொறிகொண்டு நூலகத்தைப்
       பொசுக்கியவர் நோக்கத்தை - இன்று
       பொசுங்கிடுவோம் கைகோர்த்து!!

அற்பசிறு சலுகைக்கும்
       அடுத்தவனின் புகழ்ச்சிக்கும் - என்றும்
       அடைவுவைத்துத் தன்னினத்தை
விற்கின்ற கொடுஞ்செயலை
       விட்டொதுக்கி இனத்தினது - நாளை
        விடிவிற்கு வழிவகுப்போம்!

எரியூட்டி நூலகத்தை
       எரித்தாலும் தமிழரது – என்றும்
       எரியாத வேட்கையதாம்
உரிமைக்கு மதிபபளிப்பேம்
       உண்மையுடன் உழைத்திடுவோம்! – நாங்கள்
       ஒற்றுமையாய்க் கைசேர்ப்போம்!!



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்