கவியரசர்
கண்ணதாசன்
புலவர் முருகேசு மயில்வாகனன்
முத்திக்கு
வித்திட்ட மூத்த கவிஞரவர்
முத்தையா என்றோர் முருகபக்தர் – தித்திக்கப்
பாவெழுதி மக்களின் பாவலராய்ப் பார்போற்றத்
தேவனடி சேர்ந்த செம்மல்.
இயலிசை நாடகம் எல்லாத் துறையும்
தயங்கா தவரடி சேர்ந்து – நயப்புறும்
அண்ணா பெரியார் அரவணைப்பும் பெற்றதனால்
வண்ணத் தமிழ்வளர்ர்க்க வாய்ப்பு.
கண்ணனின் தாசன் கலைகளின் பெட்டகம்
வண்ணத் தமிழை வலிந்துபெற்றாய் – அண்ணாவின்
ஆசி அரசியல் ஈடுபாடு ஆற்றலுள்ள
பேச்சின் சிகரமாம் பேறு.
வள்ளுவரின் செம்மொழியை வாழ்வாக ஏற்றதனை
உள்ளம் மகிழவைத்த உத்தமனார் – வள்ளலாய்
வாழ்விலே வெற்றிகண்ட வண்ணத் தமிழரவர்
ஏழ்மையைக் கண்டஞ்சா ஏறு.
ஆன்மிகம் ஆட்கொள்ள ஐயன் நெறிமாறி
வான்புகழ் யேசுபிரான் வாழ்வியலை – ஊனமின்றி
நற்றமிழில் தந்துசென்ற நாயகனார் கண்ணதாசன்
வற்றாத ஊற்றென்றே வாழ்த்து.
வாழ்வியல் – யேசுகாவியம்.
(யூன்24
கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள்)
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்