கடலோடு சில
வினாடி
கவிஞர் ரவிகிருஷ்ணா (கிருஷ்ணபிள்ளை
ரவீந்திரன்)
ஊரைப்
பெயர்த்தது
ஊழிக் கடல்வந்து
குலைந்துவிட்டது ஊர்
ஓரிரு நாளிகையில்
பின்னங் கால்கள் பிடறிதொட
முன்னம் ஓடிய கூட்டத்தை
மூடிக் கொண்டன மண்மேடுகள்
சாந்தமானது ஊர் சவக்காடாகி
சாதிக்காக நேற்றுவரை
சண்டைபோட்ட கூட்டம்
சில வினாடி எல்லாம் மறந்து
கிடைத்த கூரைக்குள் தஞ்சமாகின
இடியும் மின்னலும்
போட்டி போட்டது போல்
ஆங்காங்கே அழுகை ஒலி
இருந்த கடவுளெல்லாம்
மறைந்தது அப்போதே மாயமாய்
கடவுளானது கடல் என்பதே
மதங் கொண்ட கடலுக்கு
தெரியவில்லை
இன மத சாதியேதும்
மானுடமே வந்த கடலுக்கு
நாள் ஒன்று
பொழுது ஒன்று
நாளிகை ஒன்று
போதுமானது
ரவிகிருஷ்ணா (கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன்)
பிள்ளையார் கோயில் வீதி
கிரான்குளம் - 07, மட்டக்களப்பு
இலங்கை
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்