கனடா தாயே!
இனிதே வாழ்க!
கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா
துறந்துவந்தோம்
பெற்றவளைத் துறப்பதற்கே மனமின்றித்
தொலைவு தூரம்
இறந்துவந்தோம் இன்முகத்தோ டெமையேற்றாய் அரவணைத்தாய்
இனிய தாயாயே!
திறந்துவைத்தாய் உன்கரத்தைத் துணையென்றே பற்றியவர்
துயரம் தீர்த்தாய்
பிறந்ததினம் காணுகின்றாய் பெருந்தாயே கனடாவே
போற்றி போற்றி!
பல்லினங்கள்
பலமொழிகள் பல்வேறு பண்பாட்டில்
பழகும் மக்கள்
எல்லோரும் ஒருகுடையில் ஒன்றாகி வாழுகின்ற
உணர்வு தந்தாய்!
நல்லகுடி யாட்சியுள்ள நாடென்றே உலகரங்கில்
நற்பேர் கொண்டாய்!
வல்லபெரும் நாடாகி வளம்பொலிந்து நலம்கனிந்து
வாழ்க தாயே!
மனிதத்தின்
உரிமைகளை மதித்தரசுச் சாசனத்தில்
மலர வைத்தாய்!
தனித்துவமாய் அமைதியுடன் தவழ்கின்ற பூங்காவாய்த்
தரணி வென்றாய்!
நனிசுவைகொள் சுதந்திரமாம் நற்கனியை நாமுண்டு
நயக்கத் தந்தாய்!
இனிமைதரும் என்வீடே என்நாடே கனடாவே
இனிதே வாழ்க!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்