கனடாக் காவியம் நவமணிமாலை

தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்

காப்பு

கனடாதன் காப்பியம் காதற் புதிராய்
மனநாடு பூத்திருந்த வண்ணம்-புனலாகிப்
பொங்கும் மழையருவிப் பொய்கைக் கணபதியே
சங்கம் மருவுதமிழ் தா!

வெண்பா

தங்கத் தமிழினிக்கத் தாம்பாளப் பொன்னுதிரத்
திங்கள் கனடாத் தினமுறைய-கங்கைநதித்
தீரத்தே நின்று திருநாள் பிறந்துவரக்
கீரனாய்ப் பாட்டுரைத்தேன் கேள்!

அறுசீர் விருத்தம்

வான்பனி வீசுங் காற்று
       மண்ணெலாஞ் சூழும் வாதை
மான்பனிப் பொந்திற் தூங்கும்
       மரைஇடம் மாறிப் போகும்
தேன்பனிக் குளங்கள் நோக்கிக்
       கிழக்கினிற் பறக்கும் வாத்து
தீன்விதை அணிலார் தேடும்
       திரவியம் சருகிற் காணும்!

வெண்செந்துறை|

கழிபெரும் வீதியில் கனடா நாட்டியல்
வழியெலாங் கோடை மக்களாய்த் தோன்றுவர்!

நீர்குதி யாற்றில் நிறையுங் கூட்டமாய்
வார்நிலங் காணும் மடையென் றாகுமே!

கோடையிற் பூத்துக் குலைகளாய்த் திராட்சை
தோடையும் காய்த்துத் தொங்கிடும் கனிகளாம்!

மூடித் திரிந்தவர் மெய்நிலம் பூக்கவே
ஆடை குறைத்துமே அணிநடை பயிலுவர்!

பனியிலே மூடியும் படரும் வேனிலிற்
கனிநடை காட்டியும் காரிகை யாடுவள்!

காலத்திற் கேற்றதாய் கனடா மாறிடும்
சீலப் பண்பாடு தேசமாய் வாழுமே!

நிலைமண்டில ஆசிரியப்பா

காப்பியக் கோடுகள் கணக்கிலும் அறியார்
தோப்புக் கரணமாய்ச் சொல்லுவர் பாக்களாய்
பூக்களை மதிக்காப் பொன்மலை அடுக்கில்
ஈக்களிற் தேனை இழுக்கும் மாந்தரார்
நாக்கிளிப் புழுவாய் நஞ்சையில் ஊறிடும்
போக்கினிற் பேசுவர் புத்தகந் தெரியார்
பாக்களின் மாந்தரைப் பயிலுதல் கடனே
மீக்குறும் எம்தமிழ் விளங்கிடும் உலகே

எண்சீர் விருத்தம்

பாராளுஞ் சபையினிலே ஹரியா னந்தர்
பண்பாரும் ஒன்ராறி யோவின் ஆட்சிப்
பேராளும் புதிதான பெட்பார் மன்றில்
புதியவராய் இருவரெனப் பேசுந் தமிழர்
அதிரலொடுங் கணபதியார் லோகன் மற்;றும்
அருமிளைஞர் விஜய் என்னும் தணிகா சலத்தும்
நீதனெனும் தொரண்றோவின் நகரக் கொற்றம்
நின்றவராய்ப் பலதமிழர் நிலைத்தார் வாழ்க!

கலிவிருத்தம்

நேச நாடெனும் நித்திலத் துள்வளர்
தேச மாங்கனித் தூக்கிய செம்மையின்
வாச மைந்தரின் மாண்புகொள் ஊஞ்சலின்
ஈச னாரென வையமுத் தானதே!
(வரியில் பதினொரு எழுத்தால் ஆனது)

அறுசீர் விருத்தம் (வேறோர்வகை)

தாங்குமுளம் மானிடத்துச் சங்கமெனப் பற்றுமுளம்
       தரணிக் கேற்ற
வீங்குகதிர் நெறியாளும் விருட்சமெனக் கூறுநிலம்
       விஞ்ஞா னத்தின்
பாங்கிலுயர்க் கல்வியொடும் பட்டறிவு கொண்டதுவாய்
       பரந்த ஞானம்
ஏங்கியதோர் நாடிதுவே எழுச்சியுறும் அறிவோடும்
       இணைந்த தாமே!

கலித்துறை

ஆன மன்துயர் அறிவதொன் றன்றிவே றறியாள்
ஈன நாட்டொடும் இயன்றிடக் கனிந்திடும் இதமாள்
கூனல் வாருரைக் குறுக்கலிற் பதனிடுங் குறியாய்
மான மாங்கனி வழங்கிடுங் கனடிய மகளாள்!  

மாச்சீர்க் கவிதை

நூற்றி ஐம்பத் தொன்று என்க
நுதலிற் பொறித்த நேர்மைக் குன்றாய்ப்
போற்றி மகிழப் புதிய தாகப்
பிறந்த நாளின் புனித ஏட்டைச்
சாற்றிக் காதல் தளிர்க்கும் குறியாய்ச்
சற்புத் திரராய்த் தானை சுமந்து
ஏற்றுங் காவியம் இயற்றிக் களித்தேன்
எங்கள் கனடா வாழ்க இனிதே!

 




 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்