பிரியும் தருணத்தில்

பாவலர் கருமலைத்தமிழாழன்

யிருக்கு நீர்பாய்ச்சி வளர்த்தல் போன்று
       பாடுபட்டு பாடுபட்டு உழைத்த செல்வம்
வயிறதனின் பசிபோக்கும் சோற்றைப் போன்று
       வறியோரின் துயர்தீர்க்கப் பயன்ப டாமல்
பயிற்றுவிக்கா ஆசான்போல் வழங்கி டாமல்
       பதுக்கிவைத்து நாளெல்லாம் காவல் காத்தே
உயிர்பிரியும் தருணத்தில் எண்ணி யென்ன
       உடன்வந்தே உதவிடுமோ அந்தச் செல்வம் !

பண்குறளோன் உரைத்ததுபோல் செல்வம் தன்னைப்
       பகிர்ந்தளிக்க வருமின்பம் துய்த்தி டாமல்
உண்ணுகின்ற போதுகையால் காகம் தன்னை
       ஊவென்றே துரத்தாத கருமி என்றும்
கண்முன்னே பட்டினியில் துடிப்போர் கண்டும்
       கழிவிரக்கம் காட்டாக்கல் நெஞ்சன் என்றும்
மண்மீதில் பழியேற்றே சாகும் போதில்
       மனம்மாறி வருந்துவதால் பயன்தான் என்ன !

நற்செயல்கள் செய்யாமல் நறவு போன்ற
       நற்சொற்கள் சொல்லிடாமல் கடுஞ்சொல் பேசிக்
குற்றங்கள் பலபுரிந்து கயவ னாகக்
      குறிக்கோளே இல்லாமல் வாழ்ந்து விட்டு
முற்றியநோய் முதுமையிலே மனமோ மாறி
      மூச்சுத்தான் பிரிக்கின்ற தருணம் தன்னில்
பெற்றிட்ட ஞானத்தால் பயன்தான் என்ன
      பெயர்விளங்க வாழ்வதுவே வாழ்வா கும்மே !


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்