அரியாலையூர் திருமதி லலிதா புரூடி

புலவர் முருகேசு மயில்வாகனன்

பிறந்தவர் என்றொருநாள் இறப்பது திண்ணம்
       பிச்சல் பிடுங்கல் ஏது மின்றி
சிறப்பாய் வாழ்ந்தே சீராய்ச் செல்வது
      சீருடை மக்களின் சிந்தனைத் தெளிவே
அறவழி வாழ்ந்த அன்னை லலிதா
     அனைவரின் ஆசியும் அகத்தே பெற்று
இறையடி சேர்ந்தார் இவ்வுல கிருந்தே
     ஈர்ப்பாய் மக்களும் இணைந்து நிற்கவே.

பெண்களுக்காய்ப் பேசிய புரூடி லலிதா
       பெருமானிடம் சேர்ந்தசெய்தி பெருந்துய ரானதே
கண்ணியம் மிக்காளின் காலத்தின் முடிவது
      கருணையாள் இன்று காவிய மானாள்
எண்ணரிய சேவைசெய்த ஏந்தி ளையாள்
      ஏற்ற பணிகளில் ஏதிலர் சேவையுமே
வண்ணத் தமிழிலே வடிவமைத்தாள் பலநூல்கள்
      வாய்ப்பாகப் பேசியே மகிழவைத்துச் சென்றாளே.

பெண்ணுரிமை பேசியே பெருமை பெற்றாய்
      பேதலிப்பு ஏதுமின்றி வாழ்ந்து சென்றாய்
கண்ணுக் கினியவளாய்க் காட்சி தந்தாய்
      கல்வியின் மேம்பாட்டைக் காட்டி நின்றாய்
பண்ணும் செயல்களைப் பக்குவமாய்ச் செய்தே
      பசுமைப் புரட்சியைப் பாசமுடன் செய்தாய்
கண்ணும் கருத்துமாய்க் காத்தாய் பெருமைகளை
      காலன் கவரவே கௌரவமாய்ச் சென்றாயே.



 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்