கறுப்பு யூலை

பாவலர் கருமலைத்தமிழாழன்

லங்கையதன் வரலாற்றில் கறுப்பு யூலை
        இனத்தமிழர் படுகொலைக்கு விதைத்த நாளாம்
குலத்தமிழர் வாழ்க்கையினை அழிப்ப தந்குக்
        குவித்திட்ட இராணுவத்தின் பதின்மூ வோரை
நிலம்காக்க யாழ்ப்பாண திருநெல் வேலி
        நிலம்தன்னில் கொன்றவரின் உயிரெ டுக்க
வலம்வந்து வலம்வந்தே இராணு வத்தார்
        வரிசையாகத் தமிழிரினைக் கொன்ற நாளாம் !

வெட்டினார்கள் உடல்களினைக் கூறு போட்டார்
        வெளியேற்றிச் சொத்துகளை அபக ரித்தார்
கட்டிவைத்தே உதைத்தார்கள் ! பெண்கள் தம்மைக்
        காடையர்கள் வன்புணர்வில் சீர ழித்தார்
கட்டவிழ்த்தே பலாலி சிவ னம்மன் ஊருள்
        கணக்கின்றித் தமிழரினைச் சுட்டுக் கொன்றார்
திட்டத்தைச் செயவர்த்த னாவின் ஆட்சி
       தீட்டிடவே அமைச்சரெல்லாம் செயலில் செய்தார் !

வெலிக்கடையாம் சிறையினிலே அடைத்து வைத்த
        வெல்தமிழர் ஐம்பத்து மூன்று பேரைப்
பலிகொடுக்கும் ஆடுகள்போல் வெட்டிக் கொன்றார் !
        பக்கத்துச் சிங்களத்துக் கைதி கள்தாம்
புலிகளாக மாறுதற்கும் அகிம்சை மார்க்கம்
        புறமொதுக்கி ஆயுதம்தாம் எடுப்ப தற்கும்
வழிபிறக்க வைத்ததிந்த கலவ ரம்தான்
        வரலாற்றை மாற்றியதும் இந்நி கழ்வே !

ருஞ்சுற்றம் பிறந்தவிடம் உடைமை தம்மை
        அப்படியே விட்டுவிட்டு மனம்வெ தும்ப
பெரும்பான்மைத் தமிழரினை இடம்பெ யர்த்தி
        பெயர்தன்னை ஏதிலியாய் மாற்றி வைத்தே
செருக்களமாய்த் தமிழர்வாழ் பகுதி தன்னை
        செய்ததுவே சிங்களத்துக் கொடுங்கோ லாட்சி
கருக்கொண்ட விடுதலையாம் வேட்கை ஓங்கக்
        கால்கோளை இட்டதிந்த கலவ ரந்தான் !


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்