நட்பு

கவிஞர் அச்சுவேலியூர் கு.கணேசன்

விட்டனன் உயிரை வேதனைக் கழத்தில்
           நட்பினைக் காத்திடவே!
நட்பினைப் போலொரு நன்மனச் சேவகம்
           எப்பிறப்பிற் காண்போம்
நட்பினைக் காத்திடத் தான்பெற்ற செல்வங்கள்
           அத்தனையும் இழந்தானே!
விட்டனன் வீரியம்! வீழ்ந்தனன் கன்னன்!
           அற்புத நட்பினுக்கே!

அறிவுடையோர் அமைதியாய் அலைமோதும்
          ஆழ்கடற் தென்றல் போன்றது
அறிவிலார் நட்பு அற்றகுழத்து ஆறுநீர்ப்
          புறவை போன்றே பறந்திடும்
செறிந்திடும் செல்வச் சிறப்பினை நாடாது
          சேவையிலே ஆனந்தம் காணும்
குறிவைத்துக் கொடும்வாளி கொல்ல வரும்போதும்;
          குறிதாங்கி நெறிகாக்கும் நட்பு!

பொடிதூவிப் பேசிப் புகழ்மாலை சூடுவது
          புன்சிரிப் பெல்லாம் நட்பல்ல
இடியேறு போல இடித்துரைத்து நண்பனின்
          இடர்காக்கத் துடிப்பதே நட்பு
படியேறப் படியேறப் பாத்து மனம்நொந்து
         பரிகாசம் செய்வது நட்பல்ல
கடிகாரம் போலவே கணமும் பிசகாது
         காப்பாறத் துணிவதே நட்பு!

நடமாடும் மனிதற்கு நண்பனே பிரதானம்
         சுடுகாடு வரையும் செல்வான்
திடமாக அறம் பொருள் இன்பத்தில்
         துணையாக நிற்கும் துணைவன்
மடமாதுக் கிணையாக மனதிலே இடம்கொண்ட
         மரியாதைக் குரியவன் நண்பனே
விடமாக வினையாக ஒருபோதும் வரமாட்டான்
         வெற்றியின் நாயகன் நண்பனே!




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்