அதிகார நாற்காலி...

கவிஞர் வித்யாசாகர்

திகாரமென்ன நம் அடுக்களை நெருப்பா
எண்ணியபோதெல்லாம் நீயெடுத்து
எளியோர் மீதேறிய ?
அதிகாரமொரு அக்கறையின் ஆயுதம்..

அதிகாரமொரு உரிமைப் போர்முனையில்
நன்னெறியின் முகமாக நின்று
முரசறையும் அருந் தலைவனின்
மறப் பண்பான ஒன்று.,

அதிகாரத்தால் செதுக்கலாம், ஆயின்
வெட்டுதல் தீது,
அதிகாரத்தால் நல்விதை தூவலாம்
நஞ்சை விதைப்பது அறமன்று.,

அதிகாரத்தில் விளைவது
ஆணவ நெருப்பெனில்; அது வீட்டையும் எரிக்கும்
நாட்டையும் எரிக்கும்,
நமக்கு அதிகாரமென்பது விளக்கேற்றும்
தீயளவு வெளிச்சமாக வேண்டும்..

சுருங்கச் சொன்னால்
அதிகராமென்பது அப்பாக்களின்
கண்டிப்பெனும் அன்புச்சொல்லின் விதை;
ஆள்பவனின் ஆணைக்கு மக்களீந்த நம்பிக்கை.,

மக்களுக்கு அதிகாரம் பயத்தைத் தந்தால்
ஆள்பவரின் தரத்தில்
அமிலக் குறையென்று பொருள்;
அதே அதிகாரம் எம் மண்ணிற்கு வளத்தையும்
நல்மாற்றங்களையும் தருமெனில்
அங்கே நாற்காலி இடுவோம் ஓடி வாருங்கள்..,

வெற்றி யெம் அதிகாரத்தின்
கூர்கொண்டல்ல
நன்னடத்தையின் வேர்கொண்டு வரட்டும்,
அதற்கு முதற்சுழியிடும்
வள்ளுவப் புள்ளியில்
உங்களின் அதிகார நாற்காலியை இடுங்கள்,

அன்று, நம் விடுதலையை
நம் அறத்தோடு பாயுமதிகாரம் எல்லோரின்
நன்மைக்காய் வென்று சிறக்கும்.,

வெள்ளைக் கொடியில் வீரவசனங்களை
நம் கண்களில்நிறைந்த நேர்மையது
மிக கம்பீரத்தோடு எழுதிக்கொள்ளும்..

அப்படியொரு தருணத்தில்
ஆள்பவர் அதர்மத்தால் சுழற்றாத வாளும்,
வாழ்பவர் நேர்மைக்காக ஏந்தும் சுடராகவும் – யெம்
அதிகாரமிருப்பின்
அங்கே நாற்காலி இடுவோருக்கு நன்றி..
 




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்