ஆறுமுக நாவலர்தாம் பிறந்திலரேல்

பாவலர் கருமலைத்தமிழாழன்

யாழ்ப்பாண நல்லூரில் அவத ரித்த
       ஆறுமுகம் கந்தசிவ காமிப் பிள்ளை
ஆழ்ந்தமிழ்ப் புல்மையொடு ஆங்கி லத்தை
      அதனுடனே வடமொழியைக் கற்றுத் தேர்ந்தோன் !
வீழ்ந்திடாமல் தமிழ்வளரத் தமிழா சானாய்
      விளங்ககவை பத்தொன்ப திலான செல்வன்
வாழ்நாளைத் தமிழுக்கும் சைவநெ றிக்கும்
      வழங்கிஞாலம் அறிந்திடவே முழக்கம் செய்தோன் !

கிறித்துவர்தம் பள்ளியிலே பணிபு ரிந்தும்
      கிறித்துவநூல் பைபிளினை மொழிபெ யர்த்தும்
செறிவான தமிழுக்குச் சிறப்பைச் சேர்த்துச்
      சைவநெறி பரப்பிட்ட தமிழின் தொண்டன் !
அறிவுதனை இலங்கையர்கள் மட்டு மன்றி
      அயலகத்துத் தமிழருமே உணரும் வண்ணம்
அறிவார்ந்த சொற்பொழிவை உலக மெல்லாம்
    ஆற்றிச்செந் தமிழ்நெறியை ஓங்கச் செய்தோன் !

திருமடங்கள் பலயிவர்க்குச் சிறப்பு செய்து
      திருமுறையின் நாவலராம் பட்டம் சூட்டிப்
பெருமையுடன் பல்லக்கில் பவனி செய்து
      பேரறிஞர் எனவணங்க உயர்ந்த நாவோன் !
அருமையாக இலக்கணங்கள் இலக்கி யங்கள்
      அச்சிட்டே உரையெழுதி நூலாய்த் தந்த
திருமகன்தான் பிறக்காமல் போயி ருந்தால்
      திருத்தமிழும் சைவமுமே தாழ்ந்தி ருக்கும் !


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்