நட்பு

முனைவர் வே. புகழேந்தி, பெங்களூரு.

காதல் அரும்பியதும்
வெளிநடப்பு செய்கிறது
நட்பு.

காலாவதியான பால்ய சிநேகிதம்
புதுப்பிக்கப்படுகிறது.
முகநூல்.

பிறந்தநாள் வாழ்த்துகள் குவிகின்றன
என்றோ இறந்தவனுக்கு
முகநூல்.

நண்பர்கள் தினம் கொண்டாடுகிறான்
பெற்றோர்களை
முதியோர் இல்லத்தில் விட்டவன்.

நட்பு தினத்தன்று
கை குலுக்கி கொள்கின்றன
விற்கப்படாத வாழ்த்து மடல்கள்

சண்டையிட்டுக் கொள்கின்றனர்
ஆண்டு விழாவில்
'நட்பே நலமா?' முகநூல் குழுமத்தினர்.

விபத்துக்குள்ளாகிறது
தொடர் வண்டியிலிருந்து இறங்கியதும்
இரயில் சிநேகிதம்.

தோழமைக்கு
மூடுவிழா நடத்துகிறது
அட்சதை.

கல்லூரி வளாகத்தில்
சிதறிக் கிடக்கின்றன
இறுதி நாள் நட்புகள்.

மரக்கிளையை வெட்டியதும்
முறிந்து விழுகிறது
அண்டை வீட்டாரின் நட்பு.

படமெடுக்கிறான்
விபத்தில் சிக்கியவனை.
பின்னாசனத்தின் பிழைத்த நண்பன்.

நட்புதின வாழ்த்து கூறுகிறான்
அடுத்த அறை தோழனுக்கு
முகநூலில்.


 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்