தொலைந்துபோன முகவரியைத் தேடி அலைகிறோம்

கவிஞர் அச்சுவேலியூர் கு.கணேசன்



லைந்துபோன கனவுகளைக் காணத் துடிக்கிறோம்  - தாய்மண்ணிற்
தொலைந்துபோன முகவரியைத் தேடி அலைகிறோம்
உலைந்து அலைந்து ஊரைவிட்டு;த் தூரஓடினோம் - இப்போ
விலைகொடுத்து மீண்டுமதை வாங்கத் துடிக்கிறோம்!

நினைவைவிட்டு நீங்காத நமதூரின் பேரழகு - எமது
கனவினிலே வந்துநின்று கானம் பாடுதே
பனைமரங்கள் தரும்செல்வம் பாற்கத் தோணுதே - அழகுக்
கனைகடலும் குளிர்நிலவும் கண்ணுள் மின்னுதே

மாடுபூட்டி வண்டிவர மாதுளம்பூச் சேலைகட்டி - அங்கே
தோடுபோட்ட தோழர்களை தொங்கிநின்று பாத்தோமே
நீடுமிந்த நினைவினிலே நெஞ்சுருகி நின்றோம்--இப்போ
மாடுகன்று அழிந்ததனால் மனமொடிந்து போனோம்

கடற்கரையின் மணற்தடத்தில் காலையிலே நடந்தோம்  - அப்போ
உடற்பயிற்சி உள்ளத்தில் உவகையூட்ட மகிழ்ந்தோம்
மடைத்தலையில் மீன்குவியல் வலைமடியில் துள்ளும்--இந்த
இடத்தினிலே இப்போதம் அலையெழுந்து கொஞ்சும்!

கூடிவந்து அடியவர்கள் தேரிழுப்பார் ஒன்றாய் - அங்கே
பாடிவரும் பத்தர்களைப் பாத்துமனம் மகிழும்
ஆடிவரும் காவடிகள் அழகான கரகாட்டம் - ஐயோ!
நீடும்மிந்த நினைவுகளே நெஞ்சைநிதம் நெருடும்

போரடித்துத் தேங்காயில். பொனூஞ்சல் கட்டியாடி - அங்கே
மாரடித்து ஒப்பாரி. மனமுருகும் ஆச்சிமார்
சேறடித்து விளைநிலத்தில் சிந்துகின்ற வியர்வை - நெற்
சூடடித்து வீடுவரச் சோகமெலாம் நீங்கும் ;

காடுமேடு கழவயல்கள் கருமைநிற மலர்வனங்கள் - அங்கே
கூடுகட்டிக் குடியிருக்கும் கொக்குகளும் குருவிகளும்
சோடுபோட்டு ஆடிமகிழ் சுந்தர மயில்களுடன் - மான்கள்
ஆடுகின்ற அற்புதத்தை ஆண்டவா மீண்டும்தா!
 



 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்