விடுதலை

புலவர் முருகேசு மயில்வாகனன்

ன்னல் இதுவென்று அறியாக் காலம்
        இன்பமே பெற்றோரின் ஈர்க்கும் அரவணைப்பு
துன்பம் எதுவென்று அறியா உள்ளம்
        துணைக்கு நண்பர் யாரு மில்லை
முன்பள்ளிக் காலந்தான் முன்வ ரவேஎன்
       முதற்பிரிவு பெற்றோரிட மிருந்து முன்பள்ளி
அன்பான ஆசிரியர் அரவ ணைக்க
       ஆளுமையும் என்னுள்ளே அமர்ந்த தன்றே.

ஆண்டைந்தின் பின்னே ஆரம்ப பள்ளி
       ஆனா எழுதி அசத்திய காலம்
தூண்டும் விளக்காய்த் துணையாம் ஆசிரியர்
       தொல்லைகள் ஏதுமற்ற தூய உள்ளம்
ஈண்டெனக்கு நண்பர் என்போன் றோரே
       ஏதுமறியா எழிலான கால மன்றோ
கூண்டுக் கிளியல்லக் குற்றாலத் தருவியாய்க்
       குதுகலமாய்க் கூடியடிக் கும்மி யடித்தோம்.

துள்ளித் திரிந்தென் துடுக்க டங்கத்
       தந்தை பள்ளிக் கனுப்பி வைத்தார்
மெள்ளத் துணிந்தே முறுவ லுடனே
       மிதிவண்டி ஏறியே மெல்லச் செல்வேன்
கள்ளமின்றிக் காதலித்தேன் கல்வித் தாயை
       காலை எழுந்தே கடமை முடித்தே
உள்ளம் மகிழ உறுதியுடன் செல்வேன்
       உத்வேகம் என்னுள் உந்திடத் தானே.
 



 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்