அம்மா உன் அரவணைப்பில்

பாவலர் கருமலைத்தமிழாழன்



ம்மாஉன் அரவணைப்பில்
      அமுதூறும் மார்பகத்தில்
இம்மாவென் றின்பமுடன்
      இதழ்பதித் துறிஞ்சுமுன்னே !

கற்கண்டு நீரெடுத்துக்
      கனிவாகத் தருதல்போல்
கள்ளிப்பால் கரமெடுத்துக்
      கண்ணீரேன் காட்டுகிறாய் !

சத்தான பாலென்று
      சமுதாயம் சொல்லியதோ
சித்தர்தம் பாட்டுரைக்கும்
      சிறப்பான மூலிகையோ !

அண்ணனுக்கோ அமுதாய்ப்பால்
      அன்புடனே புகட்டும்நீ
பெண்ணெனக்கோ நெல்மணியைப்
      பிரியமுடன் திணிக்கின்றாய் !

கட்டிலிலே படுத்தவுன்றன்
      கனிமொழியின் தாலாட்டைத்
தொட்டிலிலே கேட்குமுன்னே
      தெருக்கோடி அனுப்புகிறாய் !

மங்கையராய்ப் பிறப்பதற்கே
      மாதவங்கள் செய்யாமல்
இங்குதித்தக் காரணத்தால்
      இறப்புத்தான் பரிசளிப்போ !

நெருப்பாகும் வாழ்வென்னும்
      நெருடலிலே செயும்தாயே
நெருப்பாக மாறுதற்கே
      நெரிக்காமல் வாழவிடு !
 


 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்