சதுரறியாச் சன்னதம்
புரட்சிமானிடன்
பாதை
முடிந்து பயணம் கலைந்து
பார்க்கும் போதே மடிந்துவிடும்
கூதல் முடிந்து கொழுப்புங் கரைந்து
குரங்கின் அப்பம் குறுகியபின்
நாதத் தொடுமாய் ஆடிய ஆட்டம்
நட்டம் பயின்று ஓடியபின்
வீதம் என்ன விளைச்சல் என்ன
விளக்கம் ஏதோ யாரறிவார்?
என்ன
முடிப்பு இருக்கும் வருடம்
என்ன நடப்பாம் என்பவரே
பொன்னும் மணியும் பூட்டிப் பையில்
பெருகிய தென்ன கூறுமடா?
இன்னும் வண்டி ஏற்ற நினைத்தால்
எந்தப் பொழுதுஞ் சரிவருமா?
முன்னைப் பெருமை யாமோ இன்னும்
விதைப்பு அறியா மூடருமே?
வந்து
புகுந்தோர் வகையோ டாடிய
வரலா றெல்லாம் அழிந்துவிடக்
கந்தற் பானைக் கதைதான் முடித்துக்
காரியம் கெட்டு ஓடிவிடும்
நிந்தம் இனிமேல் வேண்டாம் எங்கள்
நெருப்புக் கனல்மேல் நடப்பதற்கு
எந்தப் பொழுதும் இனிமேல் இல்லை
இடாப்பை மூடும் எத்தர்களே?
சாதனை
என்ன? வேதனை என்ன?
சாற்றுங் கரணஞ் சொல்லுமடா!
ஓதம் எடுத்து உருகும் நீரில்
உள்ளது என்ன உரசுகளோ?
வாதப் புனலின் வழியின் சேற்றில்
வன்மைத் திட்டு வாழ்கையதே!
காதம் வெந்து கட்டியம் கூறக்
கைலை வருமோ கந்தவேளே?
கஞ்சாப்
புகையில் கரையும் எங்கள்
கர்ம நிலமுஞ் சாகிறதே!
அஞ்சா மனிதர் அடுக்கும் வாளின்
அர்த்தம் சாவில் முடிகிறதே!
நெஞ்சில் மனிதம் நிறுத்தா வண்ணம்
நிரையாய் அழியப் போகிறதே!
தஞ்சம் அறியோம்! சதுர்அ றியோம்!
சகடை இனியும் ஓடுவதோ?
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|