கொண்டுவந்து போட்டுக் கொளுத்து!
கவிஞர் அச்சுவேலியூர் கு.கணேசன்
பண்டுதொட்டுப்
பாதுகாத்த பைந்தமிழ்ப் பண்பாட்டைத்
தொண்டுசெய்ய வந்தவர்கள் தூக்கிவீசக் - கண்டுகொண்டு
உண்டு உடுத்தி உடம்பை வளப்பவரைக்
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து!
தங்கத்
தமிழ்நாட்டைத் தன்னார்வப் பொன்னாட்டை
கங்கைக் கரையிருந்து கால்பதித்து - இங்குவந்து
பண்பாட்டைக் கொன்றவரைப் பற்றில்லாப் பாதகரை
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து!
அண்டிக்
கெடுத்தவரை ஆதரித்துக் கொன்றவரை
உண்டிக்குள் நஞ்சுவைத்து ஊராண்ட - சண்டியரைத்
தண்டிக்கத் தாம்விரும்பாத் தன்னார்வத் தொண்டரைக்
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து!
பேச்சினிலே மூச்சினிலே
பேரிடிபோற் கற்சிப்பார்
கூச்சமின்றிச் சோதரரைக் கொன்றவராம் -ஆச்சரியம்
பண்பாடு இல்லாதார் பாரறித்த வஞ்சகரைக்
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து!
அன்பாகப்
பேசிடுவார் ஆதரவு வாய்வீச்சு
துன்பங்கள் வந்தபோது தூரத்தே - நின்றிடுவார்
கண்ட இடமெங்கும் காணிசொத்து காசுபணம்
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து!
மந்தைகளின்
காட்டினிலே மேய்ப்பவன் மேலோனாம்
சிந்தனை இல்லாற்குச் சேவகனும் - மந்திரியாம்
கண்டபடி கொள்ளையிட்டுக் காசுபூமி சேத்தவனைக்
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|