தென்றலே நீவந்து செப்பு
பாவலர் கருமலைத்தமிழாழன்
சாதிகள்
வேறென்றே சாவைத் தருவதற்கு
வீதியில் கூடுவதை விட்டொழிக்கக் - காதினிலே
அன்பில் கலந்தவரை மன்றலிலே சேர்க்கவென்று
தென்றலே நீவந்து செப்பு !
அன்போ
பகையழித்து ஆன்றோர் அருநட்பை
நன்றாய் வளர்த்துத் துணையாக்கும் - என்றென்றும்
வன்மம் பகைவளர்த்து வாழ்வை அழிக்குமென்று
தென்றலே நீவந்து செப்பு !
புன்முறுவல்
காட்டிப் புகுந்திட்டாள் நெஞ்சுக்குள்
என்னைப் பறிகொடுத்தே ஏங்குகின்றேன் - மின்னலிடம்
என்காத கைகூட ஏற்கவைத்தே சம்மதத்தைத்
தென்றலே நீவந்து செப்பு !
கண்கள்
தனிலவள் காதல் மொழிசொல்ல
எண்ணத்தில் நான்பதித்தே ஏற்றிட்டேன் -- வண்ணமயில்
கன்னத்தில் முத்தமிடக் காலத்தைக் கேட்டெனக்குத்
தென்றலே நீவந்து செப்பு !
வெண்ணிலவின்
தண்ணொளியில் வெல்கின்ற தோள்குன்றன்
கண்மணியே என்றணைத்துக் கண்மறைந்தான் - வண்ணந்தான்
இன்றழிந்தே வாடுகின்றேன் இல்லத்தார் நோயென்றார்
தென்றலே நீவந்து செப்பு !
மன்றலுக்கு
முன்பே மணக்கும் மலர்சூடி
நன்றாகப் பொட்டிட்டே நான்திகழ்ந்தேன் - இன்னுயிரை
என்கணவர் விட்டதனால் எல்லாம் விடுவதுவோ
தென்றலே நீவந்து செப்பு !
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|