தன்முனைக் கவிதைகள்
கவிஞர் கா.ந.கல்யாணசுந்தரம்
மை
ஊற்றி எழுதிய
தூவல்கள் அலமாரியை
அலங்கரிக்கின்றன
எனது கவிதை வரிகளுடன்
குளத்தில்
வீசிய கல்லொன்று
நீர் வட்டங்களைத் தந்தது
எனது கைகளின் வலிக்கு
மருந்தானது
முன்பின்
தெரியாவிட்டால்
ஒன்றும் கவலைவேண்டாம்
நாம் அமர்ந்து கொண்டது
எதிரெதிர் இருக்கைகளில்
தேனிர்
கடைக்குள் பறந்து
எனக்கான கோப்பையில்
அமர்ந்துவிட்டுப் போனது
வண்ணத்துப்பூச்சி
உனது
பயணப் பாதையில்
மலர்கள் உதிர வேண்டும்
எனது மனமெங்கும்
மென்மையின் சுவாசம்
மெல்ல
வரும் விடியல்
காலை நடைபயணத்தில்
பனி விலகி மேலெழும்ப
வந்தமரும் பட்டாம்பூச்சி
எதிரெதிரே
சந்தித்தபின்னும்
எனது மௌன மொழிக்குள்
கவிதை எழுதிச் செல்கிறாள்
ஒரு ரசிகை
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|