இரண்டகமின்றி அசையட்டும்!.....

வேதா. இலங்காதிலகம், டென்மார்க்.


இனியென்ன! புத்தாண்டு
இரண்டாயிரத்துப் பத்து
இணைந்தாடுது எம்முடன்!
இசைவாகத் தொடரட்டும்!

வெள்ளைப் பனி மூடிய
வெள்ளை நத்தாருடன்
உள்ளே வந்தாய்!
கள்ளமின்றி உறவாடுவாயாக!

சிற்றலகால் சிறுகச்சிறுக
கொத்தி வெளியான
புத்தம்புதுக் குஞ்சாய்
புத்தாண்டே நிற்கிறாய்!

அந்தகார இருட்டிலொரு
சுந்தர ஒளியாயெமக்கு
இந்தப் புதுவருடம் ஆனாலுமது
அப்பாவியாய்த் தான் வரும்!

ஓரினத்தின் மனிதநேயத்தை
ஞானசூனியமாக்கிய கடந்தாண்டு
ஞாபகவீதியில் எப்போதும்
ஞானமுத்திரை பதிக்கும்.

இரண்டகம் செய்த
இரண்டாயிரத் தொன்பதாய்
புரண்டிடாது அசையட்டும்
இரண்டாயிரத்துப் பத்து

நாலாபுறமும் திசையறியா
காலத்தின் தலைவாசலில் - தமிழனுக்கு
ஞாலத்தில் விடியுமோவெனும்
கோலஒளியாக எதிர்பார்ப்பு புத்தாண்டுக்கு!


vetha@stofanet.dk