பாம்பு பெண்ணே ....!

புதுவைத் தமிழ்நெஞ்சன்



ன்னைப் போலத்தான்
உனக்கும் அச்சமுண்டு
ஆனாலும்
நான்மட்டும் அஞ்சுவதாய்
பொய்யுரைக்கின்றனர்

பாம்பென்றால்
படையும் நடுங்குமென்று
"பய"மொழி கூறினார்

நச்சும் பாம்புகள் குறைவு
அச்சமே நஞ்சாகிறது

பெண்ணே!
சில கடித்தால் வீங்கும்
திகுதகுவென எரியும்
நெஞ்சு படபடக்கும்
உயிருக்கு பாதிப்பில்லை

கட்டுவீரியன் கடித்தால்
கடிதில் நம்முயிர் போகும்

எலி,தவளை,பூச்சிகள்
பறவை,முட்டைகள் தான்
பசிக்குணவாகிறது

இருட்டிய பிறகே
இரைத்தேடிய புறப்படும்

பாம்புகளையே விழுங்கும்
அரச நாகப்பாம்பும் உண்டு

எடையும்,நீளமும்
வலிமையும் கொண்டது
மலைப்பாம்பு

முட்டை இட்டபின்
ஆண்பாம்புகளே
அடைகாக்கின்றன

தட்பவெப்பத்திற்கு ஏற்ப
வெள்ளை,மஞ்சள், கருப்பு
நீலம்,பச்சை, சிவப்பு, பழுப்பு என
வானவில் வண்ணங்களில்...

உனக்கு செவிகள் இல்லை
காலடி அதிர்வையே கணக்கிட்டு
நிலத்தின் அதிர்வலைகளை
வயிற்றுப்புற செதில்களால்
உணர்கிறது
எதிரிகளிடமிருந்து தப்பிக்கிறது

பிளவு பட்ட இரட்டை நாக்கு
பாலையும், நீரையும்
குடிக்க முடியாது

தலையின் நுனிப்பகுதியில்
மூக்கு உள்ளதால்
நீர்மப் பொருளில்
வாயை வைத்தால்
மூச்சுத் திணறி விடும்

எதையும் விழுங்குமே அன்றி
முட்டையை உடைத்து உறிஞ்சாது

இனம் இனத்தையே சேரும்

சாரையும் நல்லப்பாம்பும்
இணைந்திழைவதென்பது
கட்டுக்கதை

பாம்பைப் போல பெண்கள்
பெண்களைப் போல பாம்புகள்

பாம்பு பெண்ணே !

உனக்கும் பாம்பிற்கும்
வேறுபாடு குறைவு
ஒற்றுமை மிக அதிகம்

பாம்பென படுவது யாதெனில்
பெண்ணெனப் படுவதாகும்
 



 

 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்