நானும் ... மரங்களும்

மன்னார் அமுதன்

இங்குமங்குமாய் சிதறி வளர்ந்தாலும்
விருட்சங்கள் ஒவ்வொன்றும்
விதைகளின் வேதனை தான்

முட்டிப் பெயர்த்து
முகிலைக் காணமுன்
முளைகளைக் கிள்ள
எத்தனை கை

முட்டிப் பெயர்த்தோம்
முகிலினைக் கண்டோம்
முளைகளைக் கிள்ளிய
கைகளை வென்றோம்

வெட்டிச் சாய்த்தெமை
விறகாய்க் குவித்து
விலைதனைப் பேசிய
வாய்களை விற்றோம்

கிளைகள் விரித்தோம்
நிழலைப் பெற்றீர்
இலைகள் உதிர்த்தோம்
உரத்தினை விற்றீர்

பட்டைகள் உரித்தீர்
பயனெனக் குடித்தீர்
அண்டை அயலான்
கதைபல உரைத்தீர்

அடுப்படி வியர்க்கையில்
அடியினில் அயர்ந்தீர்
ஆயிரம் கதை தினம்
உரைத்தே மாய்ந்தீர்

இட்டவர் எவரோ விதையை
விட்டவர் சிலரோ நீரை
பெற்றவர் பலனைப் பலபேர்
அறுக்கையில் அணைப்பவர் உண்டோ

சோதனை கொன்று
சாதனை பிறக்கையில் - நானும்
மானுடம் இழந்து மரமாவேன்

போதனை செய்தே
பொய்மையில் உழலும் - உங்கள்
பேதமை மாலையில் சரமாகேன்



amujo1984@gmail.com