நனவாகுமோ ஒருநாள்
பாவலர் கருமலைத்தமிழாழன்
வறுமைவந்து
குடிசையிலே குடியி ருக்க
வாட்டுகின்ற பசித்தீயோ குடலெ ரிக்க
வெறுமையாகிப் போனதுவே வாழ்க்கை யென்று
வேதனையில் குடும்பத்தார் துடிது டிக்கப்
பொறுப்புடைய ஆண்மகனாய்ப் பெற்ற வர்க்கும்
பொழியுமன்பு குழந்தையொடு மனையா ளுக்கும்
நறுவாழ்வு தருவதென்றன் கடமை யென்றே
நாடுவிட்டு நாடுசெல்ல முடிவு செய்தேன்
!
கற்றிட்ட கல்விக்குப் பணிகி டைக்கக்
கய்யூட்டைத் தரவியலா ஏழ்மை யாலும்
உற்றார்கள் உறவினர்கள் ஏள னத்தில்
உதிர்க்கின்ற சொற்களினை மாற்று தற்கும்
வெற்றுடம்மை மட்டும்நான் சுமந்து கொண்டு
வெளிநாடு செல்வதற்குப் பயண மானேன்
வற்றாத பாசமுடை குடும்பத் தார்கள்
வழியனுப்பி வைத்தார்கள் கண்ணீ ரோடே !
மணலாக விரிந்திருக்கும் பாலை நாட்டில்
மழையாகச் செல்வந்தான் பொழியு மென்றார்
தணலாகத் தகிக்கின்ற பசித ணிக்கத்
தண்ணீரை மொண்டிடலாம் என்றே சென்றேன் !
மணமாக வாழ்க்கைதனை மாற்று தற்கே
மனம்தளர்ந்து போகாமல் தூங்கி டாமல்
கணப்பொழுதும் ஓய்வின்றி உழைக்கின் றேன் !என்
கனவுகளும் நனவாகும் ஒருநாள் என்றே !
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|