ஓடி வா நிலா! பாடி வா நிலா!!
கவிஞர் புதுவைத் தமிழ்நெஞ்சன்
நிலா பெண்ணே..!
உனக்கும் எனக்குமான தூரம்
3,84,400 கி.மீ
உன் ஈர்ப்பு விசையோ
என்னில் ஆறில் ஒருபங்கு தான்
என் விட்டத்தில்
கால் பங்கு தான் நீ
உன்னைச் சுற்றிக்கொண்டு
என்னையும் சுற்றி வர
27.32 நாட்கள்
நீரில்லை
ஈரப்பசை இருந்த போதும்
உன்னிடம் காற்று காணவில்லை
நாங்கள் காண்பது போல
குளிரொளி தர காரணம்
உன்மீதுள்ள கரடு முரடான
மேற்பரப்பு தான்
அதனால் தானே
பரிதியொளி குறைந்த அளவே
எதிரொலித்து
கண்ணுக்கிதமாய் காட்சியளிக்கிறது
விண்கற்கள் மோதி மோதி
உன் எழில் முகமெங்கும்
வடுக்களாய் பள்ளங்கள்
எவரெசுட்டை விடவும்
உன்னிடம்
உயரமான மலைச்சிகரம்
10,660 கண்டறிந்திருக்கிறோம்
உன் மேற்பரப்பில்
மலைகள், பள்ளத்தாக்குகள்
சமவெளிகள்,"பீடபூமிகள்"
மிகத்தாழ்வான பள்ளங்களுள்ளன
உன்னைப் பற்றி
அறியாது பாடினாலும்
உனக்குள் இருக்கும் மேடுபள்ளம்
உன் வாழ்விலும்தான் இருக்கிறது
நிலா பெண்ணே..!
உன்னைப் போலத்தான்
பெண்களும் இருக்கிறார்கள்
அவர்களின் ஒருமுகத்தை பார்த்தே
ஓராயிரம் காதல் பாடல்கள்
கருவாகி உருவாகி விடுகிறது
இன்னொரு முகத்தை
எப்போது பார்க்கப் போகிறீர்?
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|