நவீன
பொங்கல்
வித்யாசாகர்
இன்று தைப்பொங்கல்.
எல்லோரும் ஓடி
தொலைகாட்சி முன் அமர்ந்துக் கொண்டோம்;
நான் எட்டி சாமியை பார்த்தேன்
சாமியால் எங்களையோ
தொலைகாட்சியையோ
சபித்துவிட முடிய வில்லை;
'பொங்கலோ பொங்கல்'
தொலைகாட்சி நிகழ்ச்சியில் கத்துகிறார்கள்;
சாமி வெளியே வந்து
எட்டிப் பார்கிறார்
காஸ் ஸ்டவ்வில்லிருந்து
பொங்கல் வெந்துவிட்டதென குக்கர் சத்தம் போட்டது;
சாமி கரும்பை தேடினார்
கரும்பு தோலுரிக்கப் பட்டு
துண்டு துண்டாக வெட்டி
பாலித்தின் பையில் போட்டு
சூப்பர் மார்க்கட்டில் விற்றதை
வாங்கி வந்து பிரிட்ஜில் வைத்ததாக
நான் சாமியிடம் சொல்லவே இல்லை;
சாமி வராண்டாவிற்கு வந்து
எங்கே மாடு.. வயக்காடு..
எதையுமே காணோமே என்றார்
என்னால் சாமியை -
சபித்துவிட முடியவில்லை
சாமி இன்னும் -
அந்த காலத்துலயே இருக்கு!
vidhyasagar1976@gmail.com
|