எற்றுக்குப் பொன்விழாக்கள்

பாவலர் கருமலைத்தமிழாழன்
 

தராசைத் தமிழ்நாடாய்ப் பெயரை மாற்றி
         மகத்தாக ஐம்பதாண்டு நிறைந்த தென்று
விதவிதமாய் விழாக்களினை நடத்து வோரே
         விரிந்துளதா தமிழ்மொழிதான் வீதி தோறும் !
முதலிங்கே இருந்தவாறு கல்வி தன்னில்
         முழுபயிற்று மொழியாக உள்ள தாசொல்
விதவையரை அன்றுமூலை அடைத்த போன்று
         விழிகளுக்குத் தெரியாமல் உள்ளாள் அன்னை !

ட்சிமொழி யாய்த்தமிழை ஆக்கி டாமல்
        ஆங்கிலத்தை அரியணையில் ஏற்றி வைத்தார்
காட்சிமொழி சமற்கிருதைக் கோயில் வைத்துக்
        கடைவாயில் தனில்தமிழை நிற்க வைத்தார் !
வேட்டுவைக்கும் இந்தியினை அழைத்து வந்து
        வெளியேற்றித் தமிழிடத்லே அமர வைத்தார்
நாட்டினிலே இல்லாத தமிழுக் காக
         நாள்விழாக்கள் எற்றுக்கு நடத்து கின்றீர் !

பெற்றஅம்மா மம்மியாகி இறந்து போகப்
         பெயர்மாற்றம் தமிழ்மொழியைக் காக்க வில்லை
நற்றமிழர் தமிங்கிலராய் மாறிப் போக
         நற்பெயரோ தமிழ்மொழியை வளர்க்க வில்லை !
சற்றிதனை மனத்தினிலே பதிய வைத்துச்
         சாகுமுன்னே தமிழ்மொழியைத் துறைகள் தோறும்
பற்றுடனே வளர்த்துயர்வாய் உயர்த்தும் போதே
         பழியின்றிப் பெயர்மாற்றம் சிறப்ப ளிக்கும் !




 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்