சிரட்டையில மண்குழைத்து

மன்னார் அமுதன் - இலங்கை

சுவரின்றி வீடு கட்டி
நெருப்பின்றி அடுப்புமூட்டி
சிரட்டையிலே மண்குழைத்து
சோறென்று உண்கையிலும்

முருங்கைப் பூ ஆய்ந்து
முளைக்கீரைச் சொதி வைத்து
கரும்பைச் சாறாக்கிச்
சக்கையையும் சுவைக்கையிலும்

உணர்ந்த துவர்ப்பெல்லாம்
இனிப்பாத் தான் இனிச்சுதடி
உறவாகிக் கலந்த பின்தான்
இனிப்பு கூடக் கசக்குதடி

மரவெள்ளி இலை முறித்து
மாலையாக அதை வரித்து
விளையாட்டாய்த் தாலிகட்டி
வீதியிலே வலம் வந்தோம்

காணும் இடமெல்லாம்
கண்ஜாடை நீ காட்ட
காட்சிப் பொருளாகிக்
கை கோர்த்து நாம் நடக்க

தெருவெல்லாம் நமைப் பேசும்
தெருவிளக்கு நிழல் மறைவில்
நாம் பேசாக் கதை குறைவு- இன்றோ
நாம் பேசும் நாள் குறைவு

புதுத்தாலி, புதுவீடு
புதுப்பானை, புத்தரிசி
புதுநெருப்பில் புதுப்பொங்கல்
அத்தனையும் புதுசாக
நம் மனமோ பழசாக



amujo1984@gmail.com