உயிர்தனைக் கொடுத்துத் தமிழினம் உயர்ந்திட உரமாகிப்போன
உத்தம வீரரே!

அருட்கவி ஞானகணேசன்

வாழ்த்து

தம்மைத் தமிழ்மொழிக்காய்த் தாமீன்ற தங்கங்கள்
செம்மைதனைப் பாடவைத்த சீலரே – உம்பெருமை
ஈழச் சரித்திரத்தில் என்றும் நிலைத்திடவே
வாழ்மொழியாம் வண்தமிழால் வாழ்த்து!

எங்களின் மண்ணிலே எதிரிகள் விகாரைகள்
தங்கு தடைகள் தடுப்போ ரின்றியே
பொங்கி எழுந்திடப் பொருமுதே இதயம்
சங்கு முழங்கிய சரித்திர ரெங்கே?

எல்லையில் நின்றே எம்மினம் காத்தனர்
தொல்லைக ளின்றியே துணிவொடு வாழ்ந்தோம்
அல்ல லெல்லாம் அவரே தாங்கியே
நல்ல வாழ்வினை நமககெலாம் தந்தனர்

தரைப்படை வான்படை தரமிகு கடற்படை
நிரைப்பட எதிரியின் நிம்மதி தொலைந்தது!
வரைபடம் காட்டிய வண்தமி ழீழக்
கரையொடு எல்லைகள் காத்தனர் வீரரே!

ஈழமே முடிவாய் எதிரியை விரட்டியே
வாழும் வகைதனை வழங்கிய தீரர்!
நாளும் பொழுதும் நம்மவர் ஆள்கையில்
வாளோ வெட்டோ வளமண் கண்டதோ?

தேசமே அழுகுது தீரரே உம்மை
நேசமாய்த் தொழுகுது நீளுது கரங்கள்
வாச மலர்களே வண்தமிழ் ஈழத்தின்
பாசறைச் சீலரே பரவினோம் சாந்தியே!
 


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்