கஜாப் புயலும் கண்ணீரும்.....
தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்
கஜாப்
புயலும் கடும்பசியும் சேர்ந்து
நிஜத்தைக் கிளறியதே நீண்டு – தசாப்தம்
பல்லாண்டு காணாப் படுந்துயரைக் கொண்டதொரு
சொல்லாண்டு வைத்ததடா துன்பம்!
கசாப்புக்
கடைபோல காற்றுப் பிரித்த
கஜாவென் புயலையே கண்டோம்-பிசாசாய்
நிலத்தைத் துவம்சம் நிறுதூளி ஆக்கிக்
குலத்தை யழித்ததடா கூற்று!
பேயாகி
முற்றும் பிடிசாம்பர் போலாகித்
தாயான மண்மாதா சாய்ந்தாளே – தீயாகிப்
போனாளே பிள்ளைப் பிரசவத்தில் கொட்டுண்ட
கூனாளே யானாள் குறி!
கஜாக்கிப்
புயல்வந்து கஞ்சியும் இல்லா
மிசாவாய் முடித்துத் திரும்பியதே – உசாராகி
மண்மீட்புக் கென்றே மனிதமிடும் முன்னாலே
கண்கெட்டுப் போனதடா காண்!
வீடும்
குடிசைகளும் வெற்று வயிற்றோடும்
வாடும் முதியவரும் மண்ணாகிக் - காடதிரச்
சாய்ந்து மரமெல்லாம் கார்வாழை மாவென்றும்
பாய்ந்து பெயர்ந்தனவே பாறி!
ஆட்சி
அடுக்கில்லை ஆதாயம் பார்க்கின்ற
காட்சிப் பொருளெல்லாம் கண்டேனே – மீட்சியென
மக்கள் கொடுத்த வயிற்று உணவிற்தான்
மக்கள் பசிதீர்த்தார் பார்!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|