குறுங்கவிதைகள்
ஜீவா ரத்னா, திருநெல்வேலி
மௌன (விவாத)ங்களுக்குள்
மறைந்தே உயிர் வாழ்கிறது
உணர்வான உறவுகள்.
எந்த காதலும்
பெறாத வரத்தினை
எம் காதல் பெற்று
வந்ததுவோ......
தனக்குள்ளே
புதைத்து வைத்த
ஆசைதனை பறிமாற
வழியில்லையே.......
வலியோடு ........
மாற்றுப்பகிர்தலை
எனக்குள்ளே எனக்கே
பகிர்கிறேன் நான்
உன்னில் படர்ந்து திளைக்கிறேன்...
படர்ந்த இடம்
நீ அறியும் முன்
உன் கோபங்களால்
வெ(ளியே)யிலில் உலர்கிறேன்!
உன்னில் வீழ்கிறேன்
பறக்கும் பறவையிடமிருந்து
உதிரும் சிறகாய்....
புயல் காற்றினால்
உதிரும் பச்சிலையாய்......
இதமாக சில நேரம்..........
இன்னலாக சிலநேரம்......!
நீ பேசும்
வார்த்தைகளில்
எழுத்துக்கள் அனைத்தும்
விடுதலையாகி விடுகிறது
என் வெட்கம் மட்டுமே
சிறைப்படுகிறது
மதிமீறும் விதிமீறல்களாய்!
உணர்வுடன்
உறைந்த உறவுகள் கூட
பொய்த்து போகிறது....
ஆறுதல் தேடுகையில்!
தெருவின் முனை
தாண்டியும் தாண்டாத மனதோடு
தடுமாறி அங்கேயே
நின்று விடுகிறது.......
உன்னோடான என் மனம்!
யாசகம் கேட்ட
கவிதையை......
ஏளனம் செய்கிறதோ
மலராத மொட்டுகள்
தன் இதழ் விரிக்காமலே!
தவிக்க வைத்து
ரசிக்கிறது
உன் கண்கள்...
தூரநின்று
நெருங்குகிறது
நம் உணர்வுகள்!
விரலின் ரேகை
கொண்டு உருவம் கொடுத்து...
மூச்சுக்காற்றினில்
உணர்வுகளை பரிமாறி.....
உன் பெயர் சேர்த்து
என்னை முழுமையாக்கு!
அன்பின் சாயங்கள்
கரைகிறது
சில உரையாடலில்!
முற்றுப்புள்ளி வைத்து
முழுமை பெறா வார்த்தையை
தொடர்புள்ளி வைத்து தொடருவோம்!
வேரூன்றிய
ஆசைகள் எல்லாம்
இலைமறை காயாக
மறைகிறது.......
உன் விழிகளின் ஒளி படாதபோது!
எதனையும்
இயல்பாக
கடக்கும் என் மனதிற்கு .....,
உன் (மௌனம்)கண்ணீர்துளி
பெருங்கடலே!
வீழ்ந்து கொண்டுதான்
இருக்கிறேன்.....
உன் பார்வையெனும் நீர்வீழ்ச்சியில்!
விழிநீர் தாக்குதலின்
வேரூன்றி கிடந்த
ஆழ்நிலை தியானத்தில்
சட்டென துளிர்க்கிறது.
எனக்கான புது வாழ்க்கை!
மறைத்து வைத்த
பூவின்
மகரந்த வெட்கத்தை
உன் நினைவுகள் தீண்ட
பூவிதழும் தன்னிலை
மறந்து தரையில்
வீழ்திடுமே!!!
அழுத்தமான மனம்
அவமானத்தின்
படிவுகளில் படியாமல்
நின்று .......
பொழுதுகளை
தன் வசப்படுத்துகிறது!
உன் தோளில்
இளைப்பாறவே
காத்துக்கிடக்கிறது
என் விழிநீர்!
உனக்குள்
என்னை புதைத்த பின்
உனக்கென்று தனி வலிகள் ஏது!
உன் இதழ்
நெற்றி தொட
வெட்கத்தில் இன்னும்
அதிகமாய் சிவக்கிறது
என் குங்குமம்!
சிறிய வாழ்க்கைக்குள்
ஆசையும் வெறுப்பும்
காதலும் கோபமும்
மறை(த்)ந்து கொண்டு
மேடையேறுகிறது!
விரல் மீட்டிய
கவிதையை
விழி மூடி வாசிக்கிறேன்
உணர்வுகளால் தீண்டியபடி!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|