வீர
சுதந்திரம்
கவிஞர் இனியன், கரூர்
ஒற்றுமை
நாட்டிலே ஓங்கிட வேண்டி - நாளும்
ஒண்டமிழ்ப் பாட்டிலே உரக்கச் சொன்னாய்!
சற்றுமி தனைநாம் சிந்தித் தோமா? - சாதிச்
சங்கம் அமைத்துடன் சண்டை யிட்டோம்!
பெண்களே நாட்டின் கண்க ளென்றாய் – அந்தோ!
எண்ணிலாத் துன்பங்கள் எய்து கின்றார்!
கண்களில் ஒன்றைக் குத்திக் கொண்டு – பின்
காணும் காட்சியில் மாட்சி உண்டோ?
ஆங்கிலக் கல்வியோர் தொல்லை என்றாய் – அதனால்
எள்துணைப் பயனும் இல்லை என்றாய்!
நாங்கள் அதனை மிஞ்ச விட்டோம் – தமிழின்
நாடி நரம்பினில் நஞ்சை இட்டோம்!
எந்தமிழ் செந்தமிழ் என்று சொன்னாய் – அந்தச்
செந்தமிழ் மெல்லச் சாதல் கண்டோம்!
சொந்த மொழியினைச் சாக விட்டு - இங்கே
வந்த மொழியினை வணங்கு கின்றோம்!
காதலை வாழ்த்தினாய் காதல் வெல்ல - சிலர்
கத்தியைத் தீட்டுவர் ஆளைக் கொல்ல!
மோதலும் அதனால் மூளும் மெல்ல - அந்த
முட்டாள் தனத்தை என்ன சொல்ல?
பாரதி! பாரதி! பைந்தமிழ்ச் சாரதி! - நீ
பாரத மண்ணிலே தோன்றுக மீண்டும்!
வீர சுதந்திரம் என்னவென்று - மக்கள்
விழிப்புணர் வெய்திட விளக்கிட வேண்டும்!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்