தமிழாய் வாழ்ந்த தண்டமிழ் பாரதி
பாவலர் கருமலைத்தமிழாழன்
ஆங்கிலேயன்
ஆட்சிசெய்த அடிமை மண்ணில்
அருங்கவிஞர் பாரதிதான்
வாழ்ந்தி டாமல்
பாங்கான புதுச்சேரி மண்ணில் வாழ்ந்து
பாரதத்து விடுதலையின்
உணர்வை ஏற்றும்
தீங்கனலில் கவிதைகளை இயற்றி வந்த
திரைமறைவு செய்தியினை
அறிந்த வ.ரா
ஓங்குபுகழ் பாரதியைக் காண்ப தற்கே
ஓரிரவு அவரிருந்த வீடு
சென்றார் !
மூடியுள்ள கதவுதனைத் தட்டும் போது
முன்காப்பாய் பாபுஎன்னும் உதவி
யாளன்
ஓடிவந்து கதவுதனைத் திறந்து கேட்க
ஒப்பற்ற கவிஞரினைக் காண்ப தற்குத்
தேடிவந்த வ.ராநான் என்று ரைத்தே
தேன்பொதிந்த மலர்கண்ட வண்டைப் போல
பாடிதமிழ் இன்பத்தில் திளைத்தி ருந்த
பாரதியைக் கண்டுமனம் சிலிர்த்து
நின்றார் !
ஆங்கிலத்தில் புலமைபெற்ற கவிஞ ரோடே
அம்மொழியில் பேசிடலாம் என்றே
எண்ணி
ஏங்கிமனம் விடுதலைக்காய்க் காத்தி ருக்கும்
ஏந்தலிடம் ஆங்கிலத்தில் பேச
லானார்!
தாங்காத வெறுப்புடனே உதவி யாளன்
தனைப்பார்த்தே
உனைப்பார்க்க வந்துள் ளார்பார்
ஈங்கவர்க்கே என்னவேண்டும் என்று கேட்டே
ஈந்தவரை அனுப்பென்று பாரதி
சொன்னார் !
சத்தியமாய் உங்களைத்தான் பார்க்க வந்தேன்
சாமியென்று வ.ராவும் பதறிச்
சொல்ல
சித்தத்தில் பிறமொழிமேல் மோகம் கொண்ட
சிறுமதியோ ரிடம்பேச ஒப்பேன்
என்றார்
புத்தியிலே செருப்படிபோல் உணர்ந்த வ.ரா
புரிந்ததம்மின் தவறுணர்ந்தே
குறுகிப் போனார்
எத்தனைதாம் மொழியறிந்தும் தமிழை நெஞ்சில்
ஏந்தியதால் வாழ்கின்றார்
பாரதி என்றும் !
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|