எவரேனும்
இப்படி காதலித்ததுண்டா
வித்யாசாகர்
மனதில்
நிறைய வைத்துக் கொண்டு
தானே -
ஒன்றுமில்லை ஒன்றுமில்லை
என்கிறாய்;
என்ன வைத்திருக்கிறாயென
எனக்குத்
தெரியாவிட்டாலென்ன
உனக்குத் தெரிந்தால்
போதும்!
-------------
தெருவில் நீ
நடந்து செல்கிறாய்;
நானும் -
நடந்துச் செல்கிறேன்;
பார்ப்பவர்கள்
நினைத்துக் கொள்கிறார்கள்
நீயும் நானும்
யார் யாரோவென்று;
உனக்கும் எனக்கும் தானேத்
தெரியும் -
நீயும் நானும்
யார் யாரென்று!
------------
உன் -
முட்டைக் கண்
பார்வையால் -
நெட்டை கால் விரித்து
உயிர் கொண்டுவிட்டது
நமக்கான காதல்!
-----------
நீ -
ஒருமுறை
கை குலுக்கிய
அந்த இறுக்கத்தின்
அழுத்தத்தில் தான்
இதயம் -
எழுந்து நின்று செய்தது
காதல்!
------------
எங்கோ -
தூரத்தில் வரும்போதே
உன்னை பார்த்துவிடுவேன்;
நீயும் -
பார்த்துவிடுவாய்;
அருகில் வந்ததும்
பார்க்காதவர்களைப் போலவே
சென்றுவிடுவோம்;
உன்னை நானும்
என்னை நீயும்
கடந்தப் பிறகு - சடாரென
இருவரும் -
திரும்பிப் பார்க்க நினைப்போம்;
திரும்பிப் பார்க்காமலேயே
செல்வோம்.
காதல் -
செந்தீயென
இருவருக்குள்ளும் எரியும்!
---------
நான் -
வாசலில் நின்றிருப்பேனென
உனக்குத் தெரியும்;
நீ -
வீட்டிற்குள் நின்று
எனக்காகக் -
காத்திருப்பாயென
எனக்கும் தெரியும்;
தெரிந்தும் -
நான் காத்திருக்கட்டுமேயென
நீ -
வீட்டிற்குள்ளேயே இருப்பாய்;
வெளியே -
ஊர் எனை மட்டும்
கிறுக்கனென சொல்லி
காரி உமிழ்ந்துப் போகும்
நம் காதலை!
-----------
உனக்கும்
எனக்கும்
திருமணமாகிவிட்டது;
குழந்தைகளும் உண்டு
பல வருடங்களுக்குப் பின்
இன்று ஏனோ -
நேருக்கு நேர்
பார்க்க நேர்ந்ததில் -
நம் குழந்தைகளையும்
குடும்பத்தையும்
மறந்து தான் போனது நம்
பார்வை!
.................
வெளியிலிருந்து கதவை
உள்ளே திறக்கும் போதும்
உள்ளிருந்து கதவை
வெளியே திறக்கும் போதும்;
இடித்துக் கொள்ளும்
யாரோ ஒருவரில் -
என்றேனும் ஓர்நாள்
நீயாக இருக்கமாட்டாயா!
---------
நீ -
என்னைத் தொட்டு நிற்கையில்;
முன்னே நகர்ந்து
வேகமாக ஓடும் பேருந்து
சற்று -
நின்றுவிட்டாலெனென்ன!
-----------
உன் தாவணியின்
மேல் மேயும்
நிறைய கண்களை பற்றி
நான் -
கவலை கொள்வதேயில்லை
நீ என்னை
பார்க்கிறாயா என்பதை தவிர!
-------
மனசு -
உன்கிட்டேயும்
என்கிட்டேயும்
இருக்கிறது தான்;
கொடுக்க யோசிப்பதில்
அறுகிறது காதல்,
அல்லது -
நீள்கிறது காலம்!
--------------
போடி இவளே..
நீயும்
உன் காதலும்
மன்னாங்கட்டியுமென சலித்தாலும்
கால்கள் உன் பின்னேயும்
மனசு உன் முன்னேயும் தானே
கிடக்கிறது!
---------
பார்த்தாயா பார்த்தாயா
இப்படித் தான்
இல்லையென்று சொல்லிவிட்டு
செல்லும்போது -
திரும்பிப் பார்க்கையில்
நம்பமுடியவில்லை
உன் பொய்யை!
---------
வா. .
வேண்டுமெனில்
ஒரு சத்தியம் செய்கிறேன்;
உன் அப்பாவும்
என் அம்மாவும்
சம்மதிக்கும் வரை உன்னை
தொடக் கூட மாட்டேன்;
சம்மதிக்கா விட்டாலும்
விடவும் மாட்டேன்!
----------
ஒரு முறை
உன் தலையிலிருந்து
பூ -
கீழே விழுகிறது;
நீ -
குனிந்து எடுக்கிறாய்;
தலையில் வைப்பதற்குள்
திரும்பி -
இங்குமங்குமாய் பார்க்கிறாய்;
என்னை பார்த்தாயா
வேறு யாரேனும் -
பார்த்தார்களா என்று பார்த்தாயா
தெரியவில்லை!
-------
நீ -
விட்டிறங்கிய பேருந்தின்
இருக்கையில் -
உன் கைக்குட்டை
விழுந்துக் கிடக்கிறது;
ஓடிவந்து எடுத்து -
லேசாக நுகர்ந்ததில்
யாரும்-
பார்த்தார்களா தெரியவில்லை
பற்றி எரிகிறது காதல்!
vidhyasagar1976@gmail.com
|