ஒரு பூச்செண்டு போதும்

ருத்ர

ஓ! மானிட உலகமே!
உன் முயற்சிகள் மகத்தானது.
உன் வெற்றிகள் சிறப்பானது.
கல்லும் மண்ணும்
உன்னை தன் காலடியில் போட்டு
நசுக்கிய போது அதிலிருந்து
நகரங்கள் ஆகினாய்.
காட்டுத்தீ சுட்டுப்பொசுக்கிய போது
அதிலிருந்து
அறிவுத்தீ கொளுத்தினாய்.
காற்று உன்னை
சுழற்றி வீசியபோது
அதில் பறக்கவும் கற்றுக்கொண்டாய்
கடல் உங்களை விழுங்கியபோது
அதில் மிதக்கும் தீவுகளாய்
மேலே எழுந்தாய்.
உன் ஆராய்ச்சி அறிவுக்கு
எல்லையே இல்லை.
அதனால் இந்த
விண் பிண்டங்கள் கூட
உன்
தின் பண்டங்கள் தான்.
செவ்வாயிலும் சந்திரனிலும்
கூடு கட்ட
உன் இறக்கைகள்
பல கோடி ஒளியாண்டுகளையும்
தாண்டி பறக்கத்தொடங்கிவிட்டது
கொல்லும் வெறியோடு
கூர் நகமும் கோரப்பற்களும்
கொண்ட வடிவங்களையெல்லம்
தாண்டி..நீ
பல ஒலிம்பிக் விளையாட்டுகளில்
வென்று
நாகரிகம் எனும் பதக்கம்
தாங்கி நிற்கிறாய்.
இதில் தோற்றுப்போனவை
அதோ அந்த
ஃபாசில்களின் படுக்கையில்
கிடக்கின்றன
உனக்கு பாடம் சொல்லிக்கொண்டு.
இதன்
உள் விசை என்ன தெரியுமா?
ஆம்! காதல் தான் அது.
மனிதன் மனிதனை நேசிக்கும்
மாபெரும் சக்தி அல்லவா அது!

'இந்த சிறு உண்மையா
இந்த பேரண்டத்தைக்கூட
என் கைக்குட்டையாக்கி
எனக்கு தந்திருக்கிறது!'

உனக்கு சிரிப்பு வருகிறது.
உனக்கு வியப்பு வருகிறது.
என் இனிய நண்பனே!
உன் முதுகுக்குப்பின்னே
இன்னும்
அதிர்ச்சி தருபவை
ஆயிரம் ஆயிரமாய் காத்திருக்கிறது.
அவற்றையெல்லாம் வெல்லும்
உன் முகத்தின் ஒளி
பூவின் முறுவல் போல்
சுடர்கின்றது.
நீ வெல்லப்பிறந்தவன் தான்.
குறுகிய வெறிகளையெல்லாம்
குறி வைத்து தாக்கிவிடு.
நீ ஆளப்பிறந்தவன் தான்
அன்பால்
அது நிறைந்த உள்ளத்தால்
நீ ஆளப்பிறந்தவன் தான்.
உயிர்கள் தின்னும்
இந்த
குண்டுகளை நோக்கி
ஒரு பூச்செண்டு போதும்
உனக்கு.
காதலர் தினத்தின்
கன பரிமாணமே இது தான்.
இதயம் திறந்து கொள் என்
இனிய நண்பனே!



epsivan@gmail.com