ஹைக்கூகள்
முனைவர் வே.புகழேந்தி,
பெங்களூரு
"மீண்டும்
வருவேன்
அழகியதொரு பெயர் தாங்கி"
அச்சுறுத்தி விடைப்பெறும் புயல்.
மின்னல் வெட்டுகையில்
துச்சமாக காண்கிறது மின்மினியை
காரிருள்.
வருத்தத்தில் இறைவன் -
சமயநூட்கள் பாராயணம் செய்கையில்
தொடர் மணியோசை.
அடித்துச்செல்ல ஏதுமில்லை
புயல் நினைவுகளைத் தவிற.
மீண்டும் கறுக்கும் மேகம்.
இரசித்திட பட்டாம்பூச்சி
இல்லை
புயல் வீசுகையில்
அவிழ்ந்த மொட்டு.
மேலெழுகிறது
பறிக்கையில் நீரில் வீழ்ந்த வாசம்
கை கொடுக்கும் வண்டின் பிம்பம்.
கனக்கிறது
கோரைப்பாயை சுருட்டுகையில்
அம்மாவின் நினைவு
மகன் முடித்து வைக்கிறான்
தந்தை விட்டுச்சென்ற
ஹைக்கூவின் ஈற்றடி.
இருட்டிலும் வழித்தவறாமல்
வந்தடைகிறது
முதல் மழை.
கார்முகில் கூட்டம்
மேலும் அதிகரிக்கிறது
கவி இயற்றும் எண்ணம்.
இருளில் இயலவில்லை
மின்விசிறிக்கு
புத்தகத்தின் பக்கங்களை புரட்ட.
விட்ட இடத்திலிருந்து
தொடர்கிறது
ஒற்றைக்கால் கொக்கு
நேற்றைய தவம்.
வருத்தத்தில் இறைவன் -
சமயநூட்கள் பாராயணம் செய்கையில்
தொடர் மணியோசை.
அடக்கம் செய்கையில்
அப்பாவை இறுதியாக பார்க்கிறது
மேகம் விடுவித்த கதிரவன்.
வண்ணத்துப்பூச்சியை
வட்டமிடுகிறது
வடிவம் பெறா ஹைக்கூ.
விலைமகள் பூஜையில்
பூக்களுடன் கலந்துக்கொண்ட
காகிதப்பூ.
வீட்டிலிருந்தே நட்சத்திர
தரிசனம்.
வாய்ப்பை வழங்கி
விடை பெறுகிறது புயல்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|