செருக்கோடு செந்தமிழைச் செப்பு
கவிஞர் கே.பி.பத்மநாபன்
நூற்றுக்
கணக்கில் நுவல்மொழிகள் தாமிருக்கப்
போற்றும் தமிழே புகழ்மொழியாம் - மாற்றுக்
கருத்தேதும் உண்டோஇம் மாநிலத்தில்? யாண்டும்
செருக்கோடு செந்தமிழைச் செப்பு.
முல்லை
மலர்போல முத்துத் தமிழ்மணம்தான்
எல்லை கடந்தெங்கும் எட்டிடுமே;- சொல்லைத்
திருத்தமுறச் சொல்கையிலே தேனொழுகும்; யாண்டும்
செருக்கோடு செந்தமிழைச் செப்பு.
மூத்த
மொழியான முத்தமிழை முன்னாளில்
காத்த தமிழர்தம் காலமெல்லாம் - பூத்திங்(கு)
உருப்பெற்று மீண்டும் உயிர்த்திடவே யாண்டும்
செருக்கோடு செந்தமிழைச் செப்பு.
அன்று
பிறந்ததாம் ஆயிரம் நன்மொழியுள்
இன்றும் தமிழே இளங்கன்னி;- என்றும்
விருப்பமுடன் இஃதை விழைவோர் உயர்வர்;
செருக்கோடு செந்தமிழைச் செப்பு.
மண்ணில்
மனிதர்க்கு மாண்பினையே ஈவதெலாம்
ஒண்ணும் தமிழ்க்கல்வி ஒன்றேயாம்;- எண்ணிக்
கருத்துடனே கற்றிந்தக் காசினியில் ஓங்கிச்
செருக்கோடு செந்தமிழைச் செப்பு.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|