உயிரும் உணர்வும் தமிழே
கவிஞர் கே.பி.பத்மநாபன்
அன்பும்
அறனும் உடைத்திட்ட இல்வாழ்வில்
இன்ப உயிருணர்வே இல்லாளாம்;- அன்புப்
பயிர்வளர்க்கும் நற்றமிழர் யாவருக்கும் என்றும்
உயிரும் உணர்வும் தமிழ்!
தம்மின்தம்
மக்கள் அறிவுடைமை யாதற்கு
நம்மில் உயிராம் தமிழுணர்வு;- அம்ம!
ஒயிலுடனே ஓரவையில் ஓங்கியமர் தற்கிங்(கு)
உயிரும் உணர்வும் தமிழ்!
ஞாலம் கருதினும்
கைகூட வேண்டுமெனின்
காலம் கருதிச்செய் காரியங்கள்;- ஞாலம்
செயித்திங்கே நானிலத்தைச் செந்தமிழன் ஆள
உயிரும் உணர்வும் தமிழ்!
நெருநல் உளனொருவன்
இன்றில்லை; ஆயின்
அருந்தமிழுக் கேதிங்(கு) அழிவு? - கருவுள்
துயின்றாலும் கல்லறையுள் மாண்டாலும் மாந்தர்க்(கு)
உயிரும் உணர்வும் தமிழ்!
(வேறு)
(அடிமண்டில ஆசிரியப்பா)
நலமுறு
அறங்களை நவில்வதும் தமிழே
துலங்கிடும் மொழிகளுள் தூயதும் தமிழே
நிலமிதில் நெறிகளை நேர்ந்ததும் தமிழே
உலகினில் மூத்ததும் உண்மையில் தமிழே!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்