வாழ்வின்
வரம்
கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா
விண்தோன்றிய
வெண்தாரகை
விடிகாலையில் ஒளிர
மண்தோன்றினன் மறைமாமகன்
மரியாள்மடி தனிலே!
தண்ணாரொளித் திருமேனியன்
தரைதோன்றிய திருநாள்
கண்ணாரவே உலகெங்கணும்
களிகூர்ந்திடும் பெருநாள்!
தேன்பெய்தது நெஞ்சங்களில்
தேவன்மகன் வரவால்
வான்பெய்தவெம் பாலையென
வளங்கண்டது பூமி
கூன்கொண்டவர் நிமிர்ந்தார்பல
குருடர்விழி பெற்றார்
நான்கெல்லையும் ஒளிவீசின
நாதன்பிறப் பாலே!
வீழ்வுற்றவர், விதியேயென
விடிவற்றவ ரானோர்,
தாழ்வுற்றவர் தகையற்றவர்
தடுமாறியே நின்றோர்,
ஏழ்மைத்தளை பூண்டோரெலாம்
இறைதூதுவன் வரவால்
வாழ்வின்சுமை நீங்கிப்பெரும்
வரம்பெற்றனர் அம்மா!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்