போரில் சிக்கிய மக்கள்

சிவா பத்மநாதன்

வந்தாரை வரவேற்று
வருவோரை எதிர்பார்த்து
வாழ்ந்திட்ட எம்மினத்தை
வாழ்விழக்கச் செய்வதற்காய்
வந்ததே போரொன்று
தந்ததே பேரழிவு!

தூங்குவதற் கொருவீடு
துடிப்பதற்குப் பலவுறவு
தாங்குவதற் கொருநிலமும்
தைரிய மாயிருந்து
ஆண்டதொரு எம்மினமோ?
ஆண்டியாய்ப் போனதுவோ?

போரென்று வந்ததினால்
புகலிடத்தில் அகதிகளாய்
தன்மானந் தானிழந்து
கையேந்தி ஏதிலியாய்
நடைப்பிணம் போலாகி
நடப்பதை யாரறிவார்?

நாட்டுக்குள் சிறைவரலாம்
சிறைக்குள்ளே நாடாமோ?
பூட்டிய கதவுக்குள்
புழுங்கியே விழலாமோ?
யுத்தமென்ற பேருக்கு
எம்மினமே வரலாறோ?

உண்பதற்கே வாய்திறக்கும்
உரிமைதரும் போருக்குள்
எண்ணுதற்கே இடமில்லை
எப்படித்தான் வாழுவதோ?
மரநிழலும் மணற்குழியும்
மக்களுக்கு நிரந்தரமோ?

வயலொடு கன்றுநிலம்
வளமொடு வாழ்ந்தயினம்
புயல்கொண்ட நிலம்போலே
போராலே சாய்ந்ததென்ன?
அயல்நாடு தானோடித்
தஞ்சமென்று வாழ்வதென்ன?

என்றோயும் போர்நிலைமை
என்றெண்ணி ஏங்கிநிதம்
நின்றுழலும் போருக்குள்
எம்மக்கள் வாடுநிலை
எப்போது நீங்கிடுமோ?
சுயவுரிமை வந்திடுமோ?

pset29@yahoo.com