கரைகளுக்கப்பால்...

மன்னார் அமுதன்

நாளை, நாளையென
எத்தனை நாளைகள்
எத்தனை இரவுகள்

ஒவ்வொரு இரவிலும்
புது விடியலை
நோக்கியதொரு பயணம்

இரவில்தானே எழுதப்படுகின்றன
இலங்கையைத் தழுவும்
அகதிகளின் விடியல்கள்

அகதியிடம்
அகதியாய் வாழும்
அவதி வாழ்க்கை

புதிதாய் தெரிந்த இருள்
இப்போது பழகியதாய்
அந்நியமாய் முறைத்த முகங்கள்
தற்காலிக அந்நியோன்யமாய்

துக்கத்தோடு கூடிய
நலன் விசாரிப்புகள்
துயரத்திலும் சிறுமகிழ்வாய்
இரை மீட்டல்கள்

காத்திருக்கும் அகதிக்கு
ஒத்தடமாய் இதமளிக்க
இன்றாவது கரை தொடுமா
கட்டு மரங்கள்

இதே கடலின்
அடுத்த கரையினில்
அலைகளைத் தாண்டியும்
ஒலித்துக் கொண்டேயிருக்கிறது
அகதியின் அலறல்கள்


amujo1984@gmail.com